தலித்துகள் இங்கு திருமணம் செய்ய கூடாது..! கோவிலை இழுத்துப் பூட்டிய மாற்று சமூகத்தினர்! அரியலூர் பதற்றம்!

அரியலூர்: பட்டியலினத்தவர் திருமணத்தை எதிர்த்து கோயிலுக்கு 12 பூட்டு போட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள கிராமம் நமக்குணம். இவ்வூரைச் சேர்ந்த அருண் ஸ்டாலினுக்கும், மணக்குடியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் திவ்யாவுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதன்பேரில், பக்கத்து ஊரான சொக்கநாதபுரம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் திருமணம் நடத்திட இரு வீட்டாரும் தீர்மானித்தனர்.

பத்திரிகை அச்சடித்து கோயில் நிர்வாகத்தில் முறைப்படி பணம் செலுத்தி ரசீது வாங்கிய அருண் ஸ்டாலின் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்நிலையில், சென்ற நவம்பர் 10ம் தேதி காலை 11 மணிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், மாப்பிள்ளை, பெண் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். ஆனால், கோயிலுக்குச் சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் கதவை 12 பூட்டுகள் போட்டு நிர்வாகத்தினர் பூட்டி வைத்திருந்துள்ளனர்.  

திருமணம் நடத்த பணம் கட்டியிருந்த நிலையில், கோயில் நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சி அளித்ததால் இதுபற்றி திருமண வீட்டார் போலீசில்  புகார் தெரிவித்தனர். செந்துறை போலீசார் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். இதில், பட்டியலினத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் செய்துவைக்கக்கூடாது என சுற்றுப்புற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோயிலுக்கு பூட்டுப் போட நேரிட்டதாக, கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் முன்னிலையில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, அனைவரும் உள்ளே சென்றனர். அர்ச்சகர்கள் யாரும் இன்றி முகூர்த்த நேரம் கடந்த நிலையில், பிற்பகல் 2 மணியளவில் திருமணம் நடந்து முடிந்தது.