தங்கச்சிக்கு திருமணம் செய்து வைக்கணும்ங்க..! 35 வயதில் டீக்கடை நடத்தும் முதிர்கன்னி ராதிகா! ஆனாலும் ஆதரவற்றவர்களுக்கு இலவச டீ!

திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் 2 சகோதரிகள் இருந்தாலும், ஆதரவற்றோருக்கு இலவசமாக டீ கொடுத்து சேவை செய்து வருகிறார் புதுக்கோட்டை அறந்தாங்கியை சேர்ந்த ராதிகா.


பாலில் தண்ணீர் கலப்பது போய், தண்ணீரில் பாலை கலந்து டீ வியாபாரம் செய்பவர்களுக்கு மத்தியில் பாக்கெட் பாலை பயன்படுத்தாமல் சுத்தமான பசும்பாலில் டீ போட்டு வியாபாரத்தில் அசத்துகிறார் ராதிகா. 

இருப்பவர்களிடம் வாங்கிக்கொள், இல்லாதவர்களுக்கு கொடு என்ற தாரக மந்திரத்தை வைத்திருக்கும் டீ கடை உரிமையாளரான ராதிகா தரமான டீ தருவது மட்டுமின்றி ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிவோருக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இவர் தரும் டீ, பிஸ்கெட்டே ஒரு உணவுதான்.

2 சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், அம்மாவின் மருத்துவ செலவை கவனிக்கவேண்டும் என்பதற்காக தன்னுடைய ஆசா பாசங்களை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்ப பாரத்தை சுமந்து வருகிறார் 35 வயதான ராதிகா. 

அதிகாலையில் டீ கடைக்கு வந்து டீ போடுவது முதல் கிளாஸ் கழுவது வரை கடையின் அனைத்து வேலைகளையும் தனி ஆளாகச் செய்கிறார் ராதிகா. இவரே முதலாளி. இவரே தொழிலாளி. 

ராதிகா 11ம் வகுப்பு படிக்கும்போது டீக் கடை நடத்தி வந்த தந்தை திடீரென இறந்துவிட குடும்பம் வறுமையில் சிக்கியது. ஏற்கனே மூத்த சகோதரி திருமணத்திற்காக வாங்கிய கடன் இருக்க, ராதிகாவின் குடும்பத்திற்கு உதவி செய்ய சொந்த பந்தங்கள் யாரும் வரவில்லை. இந்நிலையில்தான் தந்தையின் டீக் கடையை எடுத்து நடத்தி வருகிறார் ராதிகா.

ஆரம்பத்தில் பல வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு டீ போட்டு தந்த ராதிகா நாளடைவில் டீ எப்படி நன்றாக போடவேண்டும் என்று கற்றுக்கொண்டார். ராதிகாவின் கடையில் கடன் வைப்பவர்கள் கூட அவரது வறுமையை யோசித்து சரியாக கடனை திருப்பி செலுத்திவிடுகின்றனர்.

சிறுக சிறுக பணம் சேர்த்து 2வது சகோதரிக்கு திருமணம் செய்துவைத்த ராதிகா தற்போது ஒரு வீட்டையும் கட்டியுள்ளார். தனக்கு திருமணம் செய்யக் கூடிய காலம் கடந்து விட்டதாக கூறும் ராதிகா மேலும் சகோதரிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இருந்தபோதிலும் ஆதரவற்று தெருவில் சுற்றித் திரிபவர்களுக்கு இலவசமாக டீ, பிஸ்கெட் வழங்கி தன்னுடைய மனித நேயத்தை வெளிப்படுத்தி வருகிறார் ராதிகா.