மே 31ம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் லாக்டவுன் தொடருமா இல்லையா..? சென்னையில் எக்கச்சக்க பாதிப்பு நிச்சயம்..?

தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் கிட்டத்தட்ட லாக்டவுன் இல்லை என்பதுதான் நிதர்சனம். இந்த சூழலில் மீண்டும் தமிழகம் முழுவதும் லாக்டவுனை 31ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப் போகிறார்களா என்பது இன்று வரை தெளிவாகவில்லை.


இது குறித்து மருத்துவர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர்கள் அனைவருமே லாக்டவுன் நீடிக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளனர். மருத்துவ குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், 31ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை தொடரலாம் என்று அரசு நினைக்கிறது. அதே நேரம், மத்திய அரசு என்ன சொல்கிறது என்பதைக் கேட்டுக்கொண்டே அறிவிப்பு வெளியிடுமென தெரிகிறது.

மார்ச் மாதம் அமல்படுத்திய ஊரடங்குக்கும் இப்போது அமலில் இருக்கும் ஊரடங்குக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்போதுள்ள ஊரடங்கு தளர்வுகள் நிறைந்ததாக இருக்கின்றன. பஸ், ரயில் போக்குவரத்து தவிர கிட்டத்தட்ட மற்ற எல்லாவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் மட்டுமல்ல. நாடு முழுவதும், ஏன் உலகம் முழுவதுமே இதுபோன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையாத நிலையிலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. இதற்கு நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அவை உண்மையும்கூட. ஆனால், கரோனா வைரஸ் அச்சம் முழுமையாக முடிவுக்கு வருவதற்கு முன்பாக ஊரடங்கில் வேகவேகமாக தளர்வுகளை அறிவிப்பது, கரோனா வைரஸ் பரவலின் 2வது உச்சத்துக்கு வழிவகுக்கும். அப்படி நடந்தால் அதன் விளைவுகள் இப்போதிருப்பதைவிட இன்னும் மோசமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், பல மாவட்டங்களில் புதிய தொற்று இல்லாத நிலை உருவானாலும், தலைநகர் சென்னை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கரோனா பரவல் நாளுக்கு நாள் பயமுறுத்தும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. அப்படி ஒரு சூழலில் இப்போதிருக்கும் ஊரடங்கை முற்றிலுமாக நீக்குவதோ, அல்லது ஊரடங்கு நிபந்தனைகளில் இன்னும் தளர்வுகளை அதிகரிப்பது ஆபத்து என்பதை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.