கொரானாவை தடுக்க தமிழகம் தயாராக இருக்கிறதாம்.. எடப்பாடியே சொல்லிட்டாருங்க.

இன்று தமிழக சட்டமன்றத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து எதிர்க்காட்சிகள் கேள்வி எழுப்பின. அந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பதில் அளித்தார்.


‘‘என்னென்ன காரணத்தினால் இந்த நோய் வரும், எப்படி எல்லாம் பரவும் என்பதை நமது சுகாதாரத் துறை அமைச்சர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினால், தும்மினால் வரும் என்று தான் சொல்லி இருக்கிறார்களே தவிர, இங்கு யாருக்கும் பாதிப்பு இல்லை. அதனால் நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. 

ஏற்கனவே மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் சொன்னார்கள், 70 வயதிற்கு மேலே பாதிப்புக்கு வாய்ப்பு என்று, அண்ணன் அதனால் அச்சப்படுகிறீர்களோ, என்னவோ, தெரியவில்லை. அந்த கவலையே வேண்டியதில்லை. நமது தமிழக சுகாதாரத் துறையை பொறுத்தவரைக்கும், நம்முடைய மருத்துவர்கள் சிறப்பான மருத்துவர்கள், இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் தமிழகத்திலே இருக்கின்றார்கள். 

ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது தெரிந்தவுடன் அவரை குணப்படுத்துகிற அளவிற்கு சிறப்பான சிகிச்சையை நம்முடைய மருத்துவர்கள் அளித்திருக்கிறார்கள். அதனால் கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது. வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மூலமாகத் தான் இந்நோய் பரவுவதாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த சுமார் ஒன்றரை லட்சம் பேர் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் யாருக்கு இந்நோய் வந்திருக்கிறதோ, அவர்களைத் தான் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்கிறார்கள். அதில் பாதிப்பு இல்லாதவர்களை வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார்கள். 

ஆகவே, தமிழகத்தை பொறுத்தவரைக்கும் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினாலோ, தும்மினாலோ, அல்லது நீங்கள் சொன்னது போல மேஜையை தொட்டாலோ, திருமணத்திற்கு போனாலோ, விமான நிலையத்திற்கு போனாலோ, ரயில் நிலையங்களுக்கு போனாலோ இப்படிப்பட்ட பாதிப்பு, அவர்கள் மூலமாக வருகிறது.

விமானத்திலிருந்து இறங்கும் போதே, நம்முடைய சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்களை பரிசோதித்து, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று, பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.