எடப்பாடியாருக்கு டாக்டர் பட்டம்..! இனி தான் அதிரடி அரசியல் ஆப்பரேசன்கள்..!

அரசியலில் பெரிய பதவிக்கு வருவதற்குப் போராட வேண்டும். அப்படி வந்தபிறகு அவர்களைத் தேடி ஆயிரமாயிரம் பதவிகள் ஓடிவரும். அப்படித்தான் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இன்று பட்டமளிப்புவிழா நடந்தது. ஏற்கெனவே கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு எல்லாம் டாக்டர் பட்டம் வழங்கியவர்தான் ஏசி.சண்முகம். 

இந்த விழாவுக்கு ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஆர்.எம்.வாசகம் வரவேற்புரை நிகழ்த்தினார். பட்டமளிப்பு விழா அறிக்கையை துணைவேந்தர் கே.மீர் முஸ்தபா ஹூசைன் வாசித்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு குறித்து வீடியோ காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு அரசியலுக்கும் தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி செய்திருக்கும் பங்களிப்பிற்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஏற்புரையில் பேசிய எடப்பாடியார், ‘இந்தப் பட்டம் காரணமாக பொறுப்பு கூடியுள்ளது.மாணவர்கள் ஏட்டுப்படிப்புடன் வாழ்க்கை கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

கட்சியில் தேவையில்லாத ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன, அவற்றை ஆபரேசன் செய்து எடப்பாடியார் அகற்றவில்லை என்றால் சிக்கல்தான். இந்த பட்டத்துக்குப் பிறகாவது அதை செய்தே தீருவார் என்கிறார்கள்.

எடபாடியாரை அடுத்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா ஆஸ்பத்திரியின் தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.