"தமிழ்மொழியையும், தமிழக இளைஞர்களையும் புறக்கணிக்கும் 'குரூப் -2'-க்கான புதிய பாடத்திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களைத் திரட்டி தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குரூப் 2 பரீட்சையில் தமிழ் நீக்கம்! முக ஸ்டாலின் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
தமிழ்மொழித் தேர்வுக்கு இருந்த 150 மதிப்பெண்களை நீக்கி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் “க்ரூப் - 2“ தேர்வை நடத்துவதற்கான புதிய பாடத் திட்டத்தை அறிவித்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேலையில்லாமல் தவிக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலக் கனவுக்கு அடிப்படையாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திகழ்கிறது. அரசுப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளிவந்தவுடன், அதில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று இளைஞர்கள் இரவு பகலாகப் பாடுபட்டு உழைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் “இன்டர்வியூ உள்ள” க்ரூப்-2 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் தமிழ்மொழித் தேர்வை நீக்கியிருப்பதால், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள ஏழை மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது.
தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, தமிழில் பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று ஆணையிட்டார். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிச்சாமியோ, தமிழ்நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு, இனிமேல் வேலை இல்லை என்று, புதிய பாடத்திட்டத்தைக் கொண்டு வருகிறார்.
“இன்டர்வியூ” உள்ள க்ரூப் 2 தேர்வுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடைபெறுகிறது. இன்டர்வியூ இல்லாத க்ரூப் 2, 2A தேர்வுக்கு முதல்நிலைத் தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் இன்டர்வியூ உள்ள க்ரூப் 2 தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வில் (Preliminary Exam) தமிழ்மொழியில் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பைத் தட்டிப் பறித்துள்ளது, இந்த அ.தி.மு.க. அரசு.
அதுமட்டுமின்றி தப்பித் தவறி முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றால், முதன்மைத் தேர்வில் (Main Exam) கிராமப்புற இளைஞர்கள் வெற்றி பெறவே முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால், முதன்மைத் தேர்வின் 300 மதிப்பெண்களில், 100 மதிப்பெண்கள் மொழிபெயர்ப்பிற்கும், (Part-A) மீதியுள்ள 200 மதிப்பெண்கள் (Part-B) “சுருக்கியெழுதுதல் முதல் கடிதம் எழுதும்” வரையுள்ள பல்வேறு தலைப்புகளுக்கும் வழங்கப்படும் என புதிய பாடத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. “தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும்” - “ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும்” மொழி பெயர்ப்பு செய்வதற்கு 100 மதிப்பெண்கள் என நிர்ணயித்துள்ள
பார்ட்- ஏ தேர்வில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுக்காவிட்டால் - அந்த இளைஞர் 200 மதிப்பெண்களுக்கு எழுதிய “பார்ட்-பி” விடைத்தாள் திருத்தப்பட மாட்டாது. “தமிழ்மொழித் தேர்வு ரத்து”, “மொழி பெயர்ப்புக்கு மதிப்பெண்” ஆகிய கெடுபிடிகள் மூலம், இன்டர்வியூ உள்ள க்ரூப்-2 பதவிகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத பேராபத்தினை உருவாக்கியுள்ளது அ.தி.மு.க. அரசு.
“இன்டர்வியூ” இல்லாத க்ரூப் 2, 2A பதவிகளைப் பொறுத்தமட்டில், அதில் தமிழ்மொழிக்கு இருந்த மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்மொழிக் கேள்விகள் மூலம் அதிக மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் - பொது அறிவுத் தேர்வில் மட்டுமே தமிழ்மொழி படித்த மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை தோற்று விக்கப்பட்டுள்ளது. பொது அறிவுத் தேர்வில் தோற்று விட்டால், அந்த இளைஞருக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகி விடும்.
டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள புதிய பாடத்திட்டம் வேறு மாநில இளைஞர்களுக்கும், மத்திய கல்விப் பாடத் திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து - தமிழக அரசு பணியிடங்களைத் தாரை வார்ப்பதாக அமைந்துள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி பயின்று- குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வந்து வேலை தேடும் தமிழக இளைஞர்களை விரட்டியடிக்கும் உள் நோக்கத்துடன் அ.தி.மு.க. அரசு இந்த புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
தமிழ்மொழியை அவமதிக்கும் ஒரு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்- தமிழக இளைஞர்களுக்கு பச்சைத் துரோகம் செய்யும் அறிவிப்பை வெளியிட வைத்த முதலமைச்சர் திரு. பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.அரசும் தமிழ்நாட்டில் வேலை இல்லாத தமிழ் இளைஞர்களுக்குத் தேவையா என்ற கேள்வி, வேலை வாய்ப்பின்றிக் காத்திருக்கும் 90 லட்சம் இளைஞர்கள் மனதில் எழுந்துள்ளது.
ஆகவே தமிழ்மொழிக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த க்ரூப் 2, 2A பதவிகளுக்கான புதிய பாடத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், “இன்டர்வியூ உள்ள க்ரூப் டூ பதவிகள்” மற்றும் “இன்டர்வியூ இல்லாத க்ரூப் 2, 2A பதவிகள்” ஆகியவற்றிற்கு தமிழ்மொழித் தேர்வினை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்மொழியையும், தமிழக இளைஞர்களையும் புறக்கணிக்கும் இந்தப் பாடத் திட்டத்தை உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி திரும்பப் பெறாவிடில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களைத் திரட்டி- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பும், மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.