திடீர் நெஞ்சுவலி! பேரறிவாளன் மருத்துவ மனையில் அனுமதி! அற்புதம் அம்மாள் பதற்றம்!

நெஞ்சுவலி காரணமாக பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது தாயார் பதற்றம் அடைந்துள்ளார்.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சென்னை அருகே உள்ள புழல் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பேரறிவாளன் திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்.

உடனடியாக பேரறிவாளனை காவலர்கள் சிறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பேரறிவாளனை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

இதனையடுத்து சிறைக்காவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெஞ்சு வலியுடன் பேரறிவாளனுக்கு சிறுநீர் தொற்றும் இருப்பதால் மருத்துவமனையிலேயே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பேரறிவாளன் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து அவரது தாய் அற்புதம் அம்மாள் துடித்துப் போய் உள்ளார்.

உச்ச நீதிமன்றமே கூட பேரறிவாளனை சிறையில் இருந்து விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுத்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் பேரறிவாளனை விடுவிக்க வேண்டுமென்று ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவு எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில் பேரறிவாளன் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.