கொரோனா காலத்தில் மாணவர்களுக்குத் தேர்வும், ராமர் கோவில் கட்டுவதும் தேவைதானா ..? - கி.வீரமணி

கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவதற்கு மாநில அரசும், ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசும் துடியாக துடித்துக்கொண்டு இருக்கின்றன. இதெல்லாம் தேவைதானா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கி.வீரமணி.


மாணவர்கள் தேர்வுகள் எழுதுவதோ அல்லது நிலைமை சீராகும்முன் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைத் திறப்பதோ உயிருடன் விளையாடும் மிகப்பெரிய விபரீத விளையாட்டு ஆகும்.

‘சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்‘ என்ற பழமொழிக்கொப்ப, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உயிர் இருந்தால்தான் படிப்பையே தொடர வாய்ப்பு ஏற்படும். இளம்பிள்ளைகளையும் அத்தொற்று பாதித்துள்ள செய்திகள் வரும் நிலையில், இப்படி மாணவர்களை அலைக்கழிப்பது தேவையா? யாருக்குக் கல்வி - அவர்களுக்குத்தானே - அவர்கள் உடல்நலத்திற்குத்தானே முன்னுரிமை - இந்நிலையில் அவசரம் காட்டுவது புத்திசாலித்தனமா?

அதுபோல, கோவில்கள் திறப்பதை - மக்கள் கூடும் திருவிழாக்கள் நடத்துவதை முன்பு தடை செய்தது சரியானது. (இதில் ஆத்திகம் - நாத்திகம் இல்லை; மனிதநேயத்தோடு நாம் எழுதுகிறோம்) அதை விலக்குவது தவறான முடிவு என்பதற்கு திருப்பதி கோவில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், அர்ச்சகர்கள் பலர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். (அர்ச்சகர் ஒருவர் மாண்டார் என்பதெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் பழைய நிலை (Status Quo) இருந்திருந்தால்).

கொஞ்ச காலத்திற்கு - நிலைமை கட்டுக்குள் முழுமையாக வரும் வரையில் எந்த இடத்திலும் மக்கள் பெருங்கூட்டமாகக் கூட அனுமதிக்கவே கூடாது! திருமண விழாக்களில் கட்டுப்பாடு, சவ அடக்கம் நிகழ்வுகளில் கட்டுப்பாடு என்று வரும்போது, இப்போது பக்தி என்ற பெயரால், மத விழாக்களுக்கு கட்டுப்பாடற்று கூடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவது தேவையா?

அயோத்தியில் இராமர் கோவில் அடிக்கல்பற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் அவர்கள், ‘‘இந்த கரோனா காலத்தில் இதுதான் முக்கிய பணியா?’’ என்று கேட்டுள்ளார். அதற்கு என்ன பதில்? நம்மைப் போன்றவர்கள் கேட்டிருந்தால், உடனே அதற்கு வேறு வியாக்கியானங்கள் சொல்லியிருப்பார்கள். எப்பகுதி - வடநாடு - தென்னாடு ஆனாலும் மக்களின் உயிர் - மனித உயிர்களின் மதிப்பு முக்கியம்தானே என்று கேட்டுள்ளார் வீரமணி.