யெஸ் வங்கியை காப்பாற்றும் ஸ்டேட் வங்கி... அடுத்து ஸ்டேட் வங்கியை யாருங்க காப்பாத்துறது..?

கடந்த ஒரு வார காலமாக ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் விவகாரத்தில். யெஸ் வங்கி முதல் இடத்தையும். கொரோனா வைரஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.


கடும் நிதிச் சிக்கலில் சிக்கி மூலதன இழப்பு ஏற்பட்டு பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ள யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு. யாரும் எதிர்பாராத வண்ணம் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

அதன்படி யெஸ் வங்கியின் 26 சதவீத பங்குகளை சுமார் 6000 கோடி மதிப்பீட்டில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருவதாகவும். மேலும் 23 சதவிகிதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் சுமார் 5,000 கோடி நிதி திரட்ட உள்ளதாகவும். 

யெஸ் வங்கியின் மூலதன செக்யூரிட்டியை கொண்டு பாரத ரிசர்வ் வங்கியிடம் சுமார் 10 ஆயிரம் கோடி நிதி உதவி கோர உள்ளதாக தெரிவித்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி . இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த முதலீட்டு ஒப்பந்த பணிகள் முடிவடையும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஸ்டேட் வங்கி.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கடும் சரிவில் உள்ள இந்த வங்கியின் பங்குகள் உயர ஆரம்பித்துள்ளன. தனியார் துறை வங்கிகளில் அதிகப்படியான வராக்கடனை சந்தித்துள்ள யெஸ் வங்கி. தனது கடந்தகால ஆண்டறிக்கையில் தவறான அறிவிப்புகளை வெளியிட்டதன் காரணமாக. மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இதன் காரணமாக கடந்த ஒருவாரமாக இந்த வங்கியின் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் நஷ்டத்தில் பயணிக்கும் இந்த வங்கியின் மூலதனத்தை உயர்த்த பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி முன்வந்து இருக்கின்ற சூழலில்.

இந்த வங்கியின் பங்குதாரர்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாகவும். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இணைந்து யெஸ் வங்கியின் பங்குகளை கையகப்படுத்த உள்ளதாக பங்குச் சந்தைகளில் வலம் வரும் செய்திகளால் தற்போது நிம்மதி பெருமூச்சு விடுவதாக கூறி சந்தோசம் அடைகின்றனர்.

மணியன் கலியமூர்த்தி