ஸ்டாலின் வெற்றி! கிண்டலடிக்கும் ரரக்கள்! உபிக்கள் பதிலடி என்ன தெரியுமா?

சட்டசபையில் எந்த மாற்றமும் நிகழவில்லை, மத்திய அரசில் பங்கெடுக்க வழியும் இல்லை என்ற நிலையில் தி.மு.க.வின் வெற்றியால் எந்தப் பயனும் இல்லை என்று குரல் கொடுப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கிறார்கள் கட்சியின் உடன்பிறப்புகள். அவங்க என்ன சொல்றாங்கன்னு கேளுங்க.


தேசிய அளவில் பாஜக பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் தமிழகத்தில் திமுக பெற்றுள்ள வெற்றியால் எந்த பலனும் இல்லை எனும் கருத்து பலரால் முன்வைக்கப்படுகிறது. ஜனநாயகத்தில் இதைவிட தவறான கருத்து இருக்க முடியாது. மக்கள் தங்கள் நம்பிக்கை அடிப்படையில் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, திமுக கூட்டணி எம்பிகளுக்கு மக்களவை ஆற்ற வேண்டிய பணிகள் இருக்கின்றன. ஆட்சி அமைப்பது மட்டும் தானா? ஜனநாயகம்? ஆட்சியில் இருப்பவர்களை தட்டிக்கேட்பதும், வழி நடத்துவதும் அதைவிட முக்கியமானது. வலுவான எதிர்கட்சிகள் தான் வலுவான ஜனநாயகத்திற்கு அடிப்படை. 

அதிலும், பாஜக மற்றும் மோடி போன்ற மாற்று, விமர்சன கருத்துக்களுக்கு வாய்ப்பும் மதிப்பும் அளிக்காத ஒரு ஆட்சியை தேர்வு செய்துள்ள நிலையில், எதிர்கட்சிகளின் பணி மிகவும் முக்கியமானது. அந்த வகையில் திமுக கூட்டணியின் வெற்றி முக்கியமானது. குறிப்பாக, நல்ல பேச்சாற்றலும், சமூக சிந்தனையும் கொண்ட பலர் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றுள்ளனர். 

இவர்களோடு தோழர்களும் கணிசமான அளவு வெற்றி பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 

பாஜக வெற்றியுடன் எதுவும் முடியப்போவதில்லை. இந்தியா மற்றும் அதன் கருத்தாக்கத்திற்கான செயல்பாடு அப்படியே தான் இருக்கிறது. பாஜக போன்ற ஒரு கட்சியிடம் மீண்டும் ஆட்சியை கொடுத்துவிட்டு பேசமால் இருப்பது இன்னமும் மோசமாக இருக்கும்.

மத்தியில் மட்டும் அல்ல மாநிலத்திலும் எதிர்கட்சிகளுக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. 

எனவே, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் துடிப்புடன் தங்கள் ஜனநாயக மற்றும் கருத்தியல், மக்கள் செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். மக்களவையில் மக்கள் பிரச்சனை, இந்தியாவின் அடிப்படையான பண்புகளை காப்பதற்கான குரல் உரத்து ஒலிக்க வேண்டும். தயவுசெய்து திமுக வெற்றியால் பயனில்லை எனக்கூறி ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக வேண்டாம்!