சங்கீத வித்துவான் ஓபிஎஸ் தாக்கல் செய்திருப்பது உதவாக்கரை பட்ஜெட்! ஸ்டாலின் காட்டம்!!!

இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசிய விவரம் பின்வருமாறு:


இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய அ.தி.மு.க அரசினுடைய நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. சங்கீத வித்வான் பாடுவது போல நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

பொதுவாக இந்த பட்ஜெட் என்பது ஏழை - எளிய மக்களுக்கு எந்த வகையிலும் பயன்பட முடியாத ஒரு உதவாக்கரை பட்ஜெட்டாக அமைந்திருக்கின்றது. வளர்ச்சிக்கு செலவு செய்ய வேண்டிய அரசு, வாங்கியக் கடனுக்கு வட்டியை செலுத்துவதைத்தான் இந்த பட்ஜெட் தெளிவாகக்காட்டுகின்றது. குறிப்பாக, தமிழ்நாடே இன்றைக்கு போராட்டக்களமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அரசு ஊழியர்கள் - ஆசிரியர் பெருமக்கள் தொடர்ந்து போராடுகின்ற ஒரு சூழ்நிலை உருவாகி, அதனால் அவர்கள் மீது இந்த அரசு கடுமையான நடவடிக்கைகள் எல்லாம் எடுத்து பல பேரை சஸ்பெண்ட் கூட செய்து வைத்திருக்கின்றார்கள்.

அரசு ஊழியர்களினுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு ஏற்கனவே இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் இரண்டு குழுக்களை அமைத்து அந்த குழுக்களும் முறையான ஆய்வு செய்து அதனுடைய அறிக்கையை அரசிடம் ஒப்படைத்து இருக்கின்றார்கள். ஆனால், ஒப்படைக்கப்பட்டு இருப்பது என்ன? அதை எப்படி நிறைவேற்ற இந்த அரசு முன் வரப்போகிறது என்பது பற்றி இந்த நிதிநிலை அறிக்கையில் சொல்லாமல் இருப்பது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை இந்த பட்ஜெட் அளித்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கான எந்த அறிவிப்பும் எந்த நிலையிலும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1 கோடி படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கக்கூடிய சூழ்நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது.

சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. ஆனால், வருவாயை பெருக்குவதற்கு எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மாநில அரசினுடைய கடன், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிமாகி நிதி மேலாண்மை ஒரு மோசமான தோல்வியை சந்திக்கக்கூடிய நிலையில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கின்றது. எப்படி கடந்த காலத்திலும் அதைத்தொடர்ந்து எடப்பாடி ஆட்சிக் காலத்தில் 110 விதியைப் பயன்படுத்தி அறிவிப்புகளை தொடர்ந்து சட்டமன்றத்தில் வெளியிட்டுக் கொண்டிருந்தார்களோ,

அதேபோலத்தான் ஏட்டுச் சுரைக்காயாக இந்த பட்ஜெட்டும் அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. நிதி ஒதுக்கீடு விளம்பரத்திற்காக செய்துவிட்டு அதைச் செலவே செய்யாமல் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய தோல்வியை இந்த அரசு அடைந்திருக்கின்றது என்பதை இந்த பட்ஜெட் எடுத்துக்காட்டுகின்றது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியைப் பற்றி இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். 2017 - 2018 ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புக்கு 560 கோடி ரூபாயும், 2018 - 2019 ஆண்டில் 3,852 கோடி ரூபாயும் வர வேண்டும் எதிர்பார்க்கின்றோம் என்ற செய்தியை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

எதற்காக இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது என்று சொன்னால், ஏன் மத்திய அரசு இந்த நிதியை மாநில அரசுக்கு உள்ளாட்சித் அமைப்புக்காக இதுவரை வழங்கவில்லை என்று கேட்டால், உள்ளாட்சி அமைப்பினுடைய தேர்தலை இந்த அரசு நடத்த முன்வரவில்லை. ஆகவே, இன்றைக்கு இந்த உள்ளாட்சி அமைப்புகள் ஒரு சீரழிந்த நிலையில் போய்க்கொண்டிருக்கின்றது என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் ஊராட்சி சபைக் கூட்டத்தை கூட்டுகின்ற நேரத்தில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எங்களிடத்தில் சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அதேபோல, விவசாயிகளைப் பற்றியும் இந்த அரசு கவலைப்படவில்லை. நெல் கொள்முதல் குறைந்த விலையில் தான் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல், கரும்புக்கான ஆதார விலையை இந்த அரசு கொஞ்சம் கூட உயர்த்தவில்லை.

ஆகவே, நிதி நிலையைப் பொறுத்தவரையில் ஒரு திவாலான கம்பெனிபோல், இன்னும் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால். ‘கொடநாட்டில் எப்படி கொள்ளையடித்தார்களோ’ அதுபோல் தமிழ்நாட்டையும் கொள்ளையடித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி’ இந்த நிலையில் தான் இந்த பட்ஜெட் அமைந்திருக்கின்றது என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கருத்து.

இவ்வாறு அவர் பேசினார்.