தி.மு.க.வில் உட்கட்சி மோதல் எக்குத்தப்பு. ஐபேக் குளறுபடியால் டென்ஷனில் ஸ்டாலின்.

கட்சியை வளர்த்து ஆட்சியில் உட்கார வைப்பதற்கு தி.மு.க.வுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் பிரசாந்த் கிஷோரின் கைங்கர்யத்தால் கட்சிக்குள் பிளவும், மோதலும்தான் அதிகரிப்பதாக புகார்.


ஆம், இப்போது இருக்கும் திமுக எம்.எல்.ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வரும் தேர்தலில் மீண்டும் சீட் தரக் கூடாது என ஐபேக் பரிந்துரை செய்திருப்பதே இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

திமுக போட்டியிடும் தொகுதிகளில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக அந்தக் கட்சித் தலைமையிடம் ஐபேக் அடுத்தடுத்து பட்டியலை கொடுத்து வருகிறது. லேட்டஸ்டாக தற்போதைய திமுக எம்.எல்.ஏக்களில் யாருக்கு மீண்டும் சீட் தந்தால் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்கிற பட்டியலையும் தந்திருக்கிறது. இதில் தற்போதைய சிட்டிங் திமுக எம்.எல்.ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் இல்லையாம். வேளச்சேரி வாகை சந்திரசேகர், நத்தம் ஆண்டி அம்பலம், சங்கராபுரம் உதயசூரியன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தத் தகவல் சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கும் தெரியவர கொந்தளிப்பு அதிகமாகியிருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ, ‘’ 5 வருஷம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருந்து நாங்க படற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். கைக்காசை எல்லாம் கட்சி நிகழ்ச்சிகளுக்காக காலி பண்ணிட்டு இப்ப வெறுங்கையோட நிற்கிறோம்.

இந்த சூழ்நிலையில் கட்சித் தலைமை எங்களை கைதூக்கிவிடும்ணு பார்த்தால் யாரோ சொல்ற பேச்சைக் கேட்டிட்டு எங்க தலையில் கல்லைத் தூக்கிபோட அல்லவா பார்க்குது! ஒரு தொகுதிக்குள்ள ஏதாவது ஒன்றிரண்டு இடங்களில் ஒருசிலரிடம் சர்வே பண்ணினால் அது ஒட்டுமொத்த தொகுதி மக்களின் கருத்தாக ஆகிவிடுமா? சீட் ஒதுக்கீட்டில் ஏடாகூடமா ஏதாவது நடந்தால் மீண்டும் திமுக எதிர்க் கட்சிதான். அதில் மாற்றமேயில்லை’’ என்கிறார்கள்.