குட்கா அமைச்சர் விஜயபாஸ்கரை கலாய்க்கும் ஸ்டாலின்! டெங்குக்கு களம் இறங்கும் தி.மு.க.!

மழை நேரத்தில் மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய பயமே டெங்கு காய்ச்சல்தான். தினமும் டெங்கு மரணம் பற்றி செய்தி.


வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், "டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்புக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கழக உடன்பிறப்புகள் துரிதப்படுத்திட வேண்டும்" என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

மேலும் அவர் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ‘‘தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்துகிற முயற்சியில் அ.தி.மு.க. அரசு இன்னும் முழுமையாக ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

இதுவரையில் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

சில குழந்தைகள், சிறுவர்கள் - சிறுமிகள் ஆங்காங்கே இந்தக் கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, இறந்து கொண்டிருக்கிறார்கள் என்ற வேதனையான செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, அரசு உடனடியாக இப்பிரச்சனையில் முழுக் கவனத்தையும் செலுத்திடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

எப்படி குட்கா விற்பனையில் மாமூல் வாங்குவதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தீவிரமாக இருந்தாரோ, அதுபோன்ற தீவிரத்தோடு இந்த டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துகிற முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் நிலவேம்புக் குடிநீர் குடிப்பதால், இந்தக் காய்ச்சலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்ற காரணத்தால், ஆங்காங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் , நிலவேம்புக் குடிநீரை பொதுமக்களுக்கு கழகத்தின் சார்பில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். அந்தப் பணியை தி.மு.க. தொடர்ந்து செய்யும்’’ என்று தெரிவித்து இருக்கிறார்.