விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஸ்டாலினுக்குச் சிக்கல்..?

மீண்டும் வேட்பாளராகிறார் செளமியா அன்புமணி


நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சூடு குறைவதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடெங்கும் 13 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதியும் அதில் ஒன்று.
வருகிற ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு ஜூன் 21ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் புகழேந்தி. விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். பொன்முடிக்கு நெருக்கமான புகழேந்தி, புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விழுப்புரத்தில் நடந்த முதல்வரின் பரப்புரை பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த புகழேந்தி, அங்கு மயங்கி விழுந்தார். மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புகழேந்தி மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியிட்டப்பட்டது. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களில் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன் படி இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் தனது மகன் பொன் கவுதம சிகாமணியை களமிறக்க அமைச்சர் பொன்முடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் கள்ளக் குறிச்சி தொகுதியில் வென்று ஐந்து ஆண்டு காலம் எம்.பியாக இருந்தவர் கவுதமசிகாமணி. ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவருக்கு சீட் தரப்படவில்லை. ஆகவே, அவருக்கு சீட் வாங்கித்தர வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறாராம்.
அதேநேரம், பா.ம.க.வுக்கு இது சாதகமான தொகுதி என்பதால் பா.ஜ.க.விடம் கேட்டு வாங்கி மீண்டும் செளமியா அன்புமணியை களம் இறக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. செளமியா அன்புமணிக்கு இருக்கும் அனுதாப அலை, அவரது வெற்றிக்குத் துணை நிற்கும் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம், எடப்பாடி பழனிசாமியும் இந்த தேர்தலை சீரியஸாக எதிர்கொள்ள இருக்கிறார். வழக்கமாக நிற்கும் முத்தமிழ் செல்வனுக்குப் பதிலாக முக்கியப் புள்ளியை நிறுத்த திட்டமிட்டுள்ளார். ஆகவே, அறிவிப்பை அடுத்து மீண்டும் தமிழகம் ஹாட் ஆகியுள்ளது. சாதாரண இடைத் தேர்தல் போன்று விக்கிரவாண்டியை தி.மு.க. ஜெயிக்க முடியாது என்கிறார்கள்.