தி.மு.க.வில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் தலைவராக வருவார் என்ற பேச்சு கிளம்பிய நேரத்தில்தான் வைகோ பிரிய நேர்ந்தது. தி.மு.க.வில் புகழ்பெற்ற தலைவராக வைகோ இருந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு வெளியேற்றப்பட்டார் என்றே சொல்லலாம்.
வைகோ மாநாட்டில் ஸ்டாலின்..! என்னடா நடக்குது இங்கே!
வைகோ கட்சியில் இருந்து வெளியேறிய நேரம் மாபெரும் புரட்சியே நிகழ்ந்தது. ஏனென்றால், எம்.ஜி.ஆர். வெளியேறியபோது அவருடன் சொற்பமான நிர்வாகிகளே வெளியே போனார்கள். ஆனால், வைகோ வெளியேறியபோது கிட்டத்தட்ட பாதி நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியே போனார்கள்.
ஸ்டாலினுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட கட்சி, இன்று ஸ்டாலின் வருகைக்காக காத்திருந்ததும், ஸ்டாலினை கட்டிப்பிடித்து பாராட்டியதும்தான் ஆச்சர்யம். எதற்காக அந்தக் கட்சி தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் துண்டுதுண்டாக சிதறியதைக் கண்டு கட்சித் தொண்டர்கள் நொந்தே போனார்கள்.
இன்று அண்ணாவின் 111-வது பிறந்த நாளையொட்டி ம.தி.மு.க சார்பில் மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடந்து வரும் மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ``இந்த விழாவில் நான் பங்கேற்றது எனக்கு பெருமை, சிறப்பு, மகிழ்ச்சி மட்டுமல்ல என்னுடைய வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன். அண்ணா தான் நம்முடைய முகம் நம்முடைய முகவரி அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
இந்த மேடையில் வைகோவுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் ம.தி.மு.க மாநாட்டில் நான் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. நீர் அடித்து நீர்விலகாது என்பது போல் நாம் இருக்கிறோம். தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். அதனால் தான் ம.தி.மு.க மேடையில் ஸ்டாலினும், தி.மு.க மேடையில் வைகோவும் இருக்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் எப்படி இந்த ஸ்டாலின் நிரந்தர தளபதியோ அதுபோல் ம.தி.மு.க-வில் அண்ணன் வைகோ நிரந்தர போர்வாள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் வைகோ கோபாலபுரத்துக்கு வந்தார். கருணாநிதி உடல்நலிவுற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது வைகோ, அவரை சந்திப்பதற்காக இல்லத்திற்கு வந்தார்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். கருணாநிதி, வைகோவை அடையாளம் கண்டுகொண்டார். வைகோவின் முகத்தை மறந்திருந்தாலும் அவரது கறுப்புத்துண்டை மறந்திருக்க மாட்டார். கருணாநிதி புன்முறுவல் பூத்தார். வைகோ கண்கலங்கினார். கருணாநிதி, கரத்தை வைகோ பற்றுகிறார். என்னுடைய கரத்தையும் அவர் பிடித்தார்.
உங்களுக்கு எப்படி நான் பக்கபலமாக இருந்தேனோ அதுபோல் தம்பிக்கு, அதாவது எனக்கு பக்கபலமாக இருப்பேன் என்று கருணாநிதியிடம் வைகோ அன்று கூறினார். கலைஞருக்கு அளித்த வாக்குறுதிப்படி எனக்கு பக்கபலமாக இருக்கிறார். எனக்கு என்றால் இந்த ஸ்டாலினுக்கு அல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பக்கபலமாக இருக்கிறார்" என்று ஸ்டாலின் பேசினார்.
இதைக் கேட்டு வைகோ வழக்கம்போல் கண் கலங்கினார். என்னமோ போங்கப்பா…