சிசுவுக்கு காது கேட்குமா - பிறவிக் குறைபாடு நீக்கும் ஃபோலிக் அமிலம் - பிறந்த குழந்தையை தினமும் நீராட்டலாமா

நம் இதிகாசத்தில், அபிமன்யு கருவாக இருக்கும்போதே சக்ரவியூகத்தை உடைத்துக்கொண்டு முன்னேறிச் செல்லும் வழியை தந்தை அர்ஜூனனிடம் இருந்து கற்றுக்கொண்டதாக வரும். உண்மையில் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும் திறன் இருக்குமா?


·         மூன்றாவது வாரத்திலேயே காதின் மொட்டு உருவாகிறது, ஏழாவது வாரத்தில் புறச்செவி உண்டாகிறது.

·         பதினாறாவது வாரத்தில் காது வளர்ச்சி கிட்டத்தட்ட முழுமை அடைகிறது. அதனால் கேட்கும் திறன் இந்த வாரத்தில் கிடைக்கிறது.


·         18 வாரத்திற்கு பிறகு தாயின் குரலை அடையாளம் காணத் தொடங்குகிறது சிசு. 

·         இனிய இசை அல்லது அதிர்ச்சி தரும் சத்தத்தைக் கேட்கும் சிசுக்கள் உடலை அசைப்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வயிற்றில் இருக்கும் சிசுக்களுக்கு இனிய ஓசை எப்போதும் கேட்கவேண்டும் என்பதற்காகத்தான், முன்பு கர்ப்பிணி கையில் நிறைய கண்ணாடி வளையல்கள் போட்டார்கள் நம் முன்னோர்கள்.

 பிறவிக் குறைபாடு நீக்கும் ஃபோலிக் அமிலம்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்லும்போது,  ஃபோலிக் அமில மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறீர்களா என்று நிச்சயம் கேட்பார்கள். எதற்காக ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் தேவைப்படுகிறது தெரியுமா?

·         ஃபோலிக் அமிலம் என்பது வைட்டமின். தாய்க்கும் குழந்தைக்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதற்கு உதவுகிறது போலிக் அமிலம்.

·         கர்ப்பிணிக்கு தினமும் 200 முதல் 400 கிராம் ஃபோலிக் அமிலம் அவசியம் தேவை. இதனை முழுமையாக உணவு மூலம் மட்டும் பெறமுடியாது.

·         ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால் கருவின் நரம்பு மண்டல வளர்ச்சி பாதிப்படைந்து பிறவிக் குறைபாடு உண்டாகலாம்.

·         கர்ப்பிணியையும் சிசுவையும் ரத்த சோகையில் இருந்தும் காப்பாற்றும் தன்மையும் ஃபோலிக் அமிலத்துக்கு உண்டு.

கர்ப்பம் அடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே ஃபோலிக் அமிலம் உட்கொள்வது மிகவும் நல்லது. ஃபோலிக் சத்து நிறைந்த பீட்ரூட், பசலை, புளிச்ச கீரை, பீன்ஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்வதும் நல்லது.


 பிறந்த குழந்தையை தினமும் நீராட்டலாமா?

குழந்தை வளர்ப்பில் ஆளுக்கு ஒரு தகவல் சொல்வார்கள் என்பதால், இளம் தாய் மாபெரும் குழப்பத்தில் இருப்பாள். குறிப்பாக தினமும் குளிப்பாட்ட வேண்டும் என்று சிலரும், வாரத்தில் ஒரு நாள் போதும் என்று சிலரும் சொல்வார்கள். எது உண்மை என்று பார்க்கலாம்.

·         வயிற்றுக்குள் நீரில் இருக்கும் குழந்தை, பிரசவத்திற்குப் பிறகு கொஞ்சம் எடை குறைவது சகஜம்.

·         எடை குறையும் நேரத்தில், குழந்தையின் தோல் உரிந்து, வறண்டு காணப்படும். இதனை சரிபடுத்துவதற்காக தினமும் குழந்தையை குளிப்பாட்டலாம்.

·         லேசாக எண்ணெய்யை சூடுபடுத்தி, குழந்தையின் மீது தேய்த்து குளிப்பாட்டுவது நல்லது.

·         அதிக குளிர், மழை காலம், குழந்தைக்கு சளி பிடித்திருந்தால் குளிப்பாட்டுவதை தள்ளி வைக்கலாம்.

குளிப்பாட்டவில்லை என்றாலும் சூடான தண்ணீரில் துண்டு நனைத்து, ஒத்தடம் கொடுப்பது போன்று துவட்டி எடுப்பது நல்லது. தலை, மேனியில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக துடைக்க வேண்டியது அவசியம்.