ரத்தம் வேண்டும்! ஒரே ஒரு அறிவிப்பு! குண்டு வெடித்த மறு நொடியே ஓடோடி வந்து நெகிழ வைத்த மக்கள்!

அண்டை நாடான இலங்கையில் தற்போது மிகப்பெரும் துயரம் நடந்து வருகிறது.


ஆம். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினம் தொடங்கி ,தற்போது வரை கொழும்பு உள்பட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்து வருகின்றன. இதுவரை 350க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்னமும் இலங்கையில் பதற்றம் நிலவுகிறது. 

இந்நிலையில், குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் தேவை என, இலங்கை தேசிய ரத்த வங்கி சார்பாக அறிவிப்பு தரப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கான மக்கள் இலங்கை தேசிய ரத்த வங்கி முன், ரத்த தானம் செய்வதற்காகக் குவிய தொடங்கினர். அப்போதும் கூட சில இடங்களில் வெடிகுண்டு வெடித்ததால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

எனினும், உதவிக்கு ஓடி வந்த மக்கள் யாரும் அங்கிருந்து விலகவில்லை. நீண்ட நேரம் நின்று, பொறுமையாக ரத்த தானம் செய்துவிட்டே பலர் வீடு திரும்பினர். இந்த சம்பவம் இலங்கை அரசு முதல் பொதுமக்கள் வரை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தொடர் குண்டுவெடிப்புக்கு இடையே மனிதாபிமானத்தை விளக்கும் சம்பவமாக இது உள்ளதாக, பலர் பாராட்டுகின்றனர்.