நான் நல்லா விளையாடுவேன்..! எப்போ பார்த்தாலும் படி படிங்றாங்க..! 10ம் வகுப்பு மாணவியின் கண்கலங்க வைக்கும் முடிவு!

மதுரை மாவட்டத்தில் விளையாட்டுகளில் சாதனை படைத்து பதக்கங்கள் வாங்கி குவித்து வந்த மாணவியை படிப்பில் முக்கியத்துவம் தருமாறு பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெற்றோர், பள்ளி நிர்வாகம், மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மாவட்டம் உறங்கான்பட்டி அருகே உள்ளது சூரத்துப்பட்டி கிராமம. இங்கு ரவிச்சந்திரன் அழகு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுதா என்ற மகளும், ராஜ்குமார் என்ற மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் அழகு தம்பதிக்கு 3வதாக மகள் காயத்ரி இருக்கிறாள். காயத்ரி உறங்கான்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

குழந்தை பருவம் முதலே விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்த காயத்ரி பள்ளி அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பல வென்று உள்ளார். விளையாட்டில் காயத்ரி காட்டிய ஆர்வத்தை பார்த்து சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில் காயத்ரி விளையாட்டில் சிறந்து விளங்குவதாகவும் ஆனால் படிப்பில் கவனம் செலுத்த வில்லை எனவும் கூறி பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு செய்தி அனுப்பி உள்ளது.

இதை அடுத்து காயத்ரியை கண்டித்த பெற்றோர் தேர்வு முடியும் வரை விளையாடுவதற்கு செல்லக் கூடாது என்றும் பாடங்களை படிப்பது மட்டுமே பிரதான வேலை என்றும் எச்சரித்தனர். எதிர்காலத்தில் விளையாட்டு வீராங்கனையாக வேண்டும் என்று கனவில் இருந்த காயத்ரிக்கு பள்ளி நிர்வாகம், பெற்றோரின் கண்டிப்பு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய வாழ்க்கையே தொலைந்து போனதாக கருதி கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு செல்லும்போது விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து விட்டு சென்றுள்ளார்.

பள்ளிக்கு அருகில் சென்ற காயத்ரி சாலையில் மயங்கி விழுந்தார். பின்னர் காயத்ரியை மீட்ட பொதுமக்கள் வெள்ளலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடார். அங்கு காயத்ரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

படிப்புக்கு முக்கியத்துவம் தருமாறு பெற்றோர் கூறும் அறிவுரையை குழந்தைகள் தவறாக புரிந்து கொள்வதாகவும் எதிர்காலத்தில் நாம் விரும்பியபடி சாதனை படைக்க முடியாது எனவும் நினைத்து இதுபோன்ற தற்கொலை முடிவுகளை எடுத்து விடுவதாக மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.