விஜய்க்கு திருப்புமுனை தந்த பாடல் எழுதியவர் மரணம்! உடலை எடுத்துச் செல்ல ரூ.20 ஆயிரம் இல்லாமல் தவித்த பரிதாபம்!

இறுதிச்சடங்கு செய்ய பணமில்லை.. சொந்த ஊருக்கு எடுத்து செல்லாமல், சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்ட திரைப்பட பிரபலம்


தமிழ் திரையுலகில் 90களின் இறுதியில் மற்றும் 2000ஆம் ஆண்டின் துவக்கத்தில் பாடலாசிரியராக வலம் வந்த முத்து விஜயன் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார். இந்நிலையில் இவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ரூ 20,000 பணம் தேவைப்பட்ட நிலையில் அது கூட இல்லாததால் சென்னையில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு பாடல் எழுதியுள்ள முத்து விஜயன், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகவும் சிலகாலம் பணி புரிந்திருக்கிறார். 

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு உதவ திரைப்படத் துறையிலிருந்து எவரும் முன்வரவில்லை. தனது 48வது வயதில் மஞ்சள் காமாலை நோய் தீவிரமடைந்து முத்துவிஜயன் உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவு குறித்து சக கவிஞரும் நண்பருமான ஆசு சுப்பிரமணியம் குறிப்பிடுகையில், திரைப்பட பாடலாசிரியர் முத்துவிஜயன் உடல்நலக்குறைவின் காரணமாக காலமாகிவிட்டார். ஒரு நல்ல கவிஞனை திரைத்துறை இழந்திருக்கிறது. இன்றைய திரையுலகம் செல்வாக்கை மட்டுமே பிரதானமாக கொண்டு இயங்கி வருகிறது. நடிகன் முதல் இயக்குனர் வரை அனைவரும் பிரபலமாக இருந்தால் மட்டுமே முக்கியத்துவம் பெற முடியும். 

முத்துவிஜயன் தனக்கென தனி செல்வாக்கை பெறத் தவறிவிட்டார். அதனால் தற்போது எவராலும் கண்டு கொள்ளாத நிலையில் உயிரிழந்துள்ளார். திரைத்துறை மட்டுமல்ல இலக்கியத்துறையும் செல்வாக்கை கொண்டு இயங்கி வருகிறது. இது பெருத்த அவமானமாக உள்ளது. சமகால கவிஞனை திரைத்துறை கொண்டாட தவறி இருக்கிறது. 

திரைத்துறை மனிதத்துவம் அற்று, செல்வாக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது ஆரோக்கியமானதா? மறைந்த கவிஞனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என குறிப்பிட்டிருந்தார்.