ஏழை பெண் குழந்தை என்றால் நீதி கிடையாதா..? ஹைதராபாத் டாக்டர் என்றால் மட்டும்தான் அரசு நடவடிக்கை எடுக்குமா?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான 8 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் வெளியே வந்த பிறகும் மக்களிடம் எந்த சத்தமும் இல்லை.


ஹைதராபாத் பல் டாக்டர் கொல்லப்பட்டதும் பொங்கியெழுந்த மக்கள், சிறுமியின் மரணத்தை கண்டுகொள்ளவே இல்லை. வசதியான, அழகான பெண்ணாக இருந்தால் மட்டும்தான் பாலியன் வன்புணர்வுக்கு மக்களிடம் இரக்கம் வருமா என்று தெரியவில்லை. 

விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசியை சுற்றிலும் டாஸ்மாக் கடைகள் அதிகம் இருப்பதும், குடிபோதைக்கு பலரும் அடிமையாகி வருவதும், தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதும் குற்றங்கள் நடைபெறுவதற்கும், அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் இத்தகைய குற்ற எண்ணிக்கை தேசிய சராசரியை விட இரட்டிப்பாக அதிகரித்து 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ள ஐந்து மாநிலங்களில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. மேலும், அதிகமான பெண் குழந்தைகள் வணிக ரீதியாகக் கடத்தப்படுவதும் நடந்து கொண்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட குழந்தை இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்க வெளியே சென்ற போது தான் இக்கொடுமை நடந்துள்ளது. அப்பகுதியில் ஒரே ஒரு கழிப்பறை கூட இல்லை. தூய்மை பாரதம் என்பதெல்லாம் கண்துடைப்பு தான். இவற்றையெல்லாம் செய்யாத அரசும் குற்றவாளிதான்.

என்கவுன்டர் செய்கிறார்களோ இல்லையோ, உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தூக்கு மேடைக்காவது அனுப்ப வேண்டும். அப்போதுதான் அந்தக் குழந்தையின் ஆன்மா சாந்தியடையும்.