விழுப்புரம்: தன் பாலின ஈர்ப்பு காரணமாக, 17 வயதான 2 இளம் பெண்கள் தாலிக் கட்டிக் கொண்ட சம்பவம் திருக்கோவிலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓரினச்சேர்க்கை! திருக்கோவிலூரில் தாலி கட்டிக் கொண்ட 2 இளம் பெண்கள்!
திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலில் கடந்த 1ம் தேதியன்று, 17 வயது மதிக்கத்தக்க 2 இளம் பெண்கள் கையில் தாலியுடன், அதிகாலை 6 மணிக்கே கோயில் வாசலில் வியர்க்க விறுவிறுக்க நின்றுகொண்டிருந்தனர். இதை பார்த்ததும் சந்தேகமடைந்த பக்தர்கள் சிலர், இதுபற்றி மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டிருக்க, திடீரென சுவாமி சன்னதி முன் வந்து நின்ற 2 பெண்களில், ஒருவர் மற்றொருவரின் கழுத்தில் தாலியை கட்டினார்.
பின்னர் காலில் மெட்டியும் போட்டுக் கொண்டனர். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து ஓடிவந்த போலீசார், குறிப்பிட்ட 2 பேரையும் திருக்கோவிலூரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, 2 பேரும் ப்ளஸ் டூ வரை ஒன்றாக படித்ததும், அதிக மதிப்பெண் எடுத்துள்ளதும் தெரியவந்தது.
ஆனால், நெருங்கிய பழக்கம் காரணமாக, ஓரினச் சேர்க்கையாளராகி 2 பேரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, இப்படி செய்துள்ளனர். இந்த விசயம் அவர்களின் வீட்டிற்கு தெரியாது என்றும் கூறியுள்ளனர். நீண்ட நாள் பழக்கத்தை மறக்க முடியாத காரணத்தால், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை விற்று, அந்த காசுக்கு தாலியும், மெட்டியும் வாங்கிக் கொண்ட 2 பேரும், அதிகாலை நேரத்தில் கோயிலில் யாரும் இருக்க மாட்டார்கள் என நினைத்து, அங்கு வந்து, தாலி கட்டிக் கொண்டதாகவும், போலீசில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, உரிய அறிவுரை வழங்கிய போலீசார், 2 பேரின் பெற்றோரை வரவழைத்து, அவர்களிடம் சிறுமிகளை ஒப்படைத்தனர். கடலூரை சேர்ந்த சிறுமிகள் இருவரும் மீண்டும் இதே போல் செய்யாமல் இருக்க தகுந்த அறிவுரைகள் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.