ஏர் இந்தியாவை விற்றுவிட்டு புதிதாக 100 விமான நிலையங்கள் திறக்கப்போறாங்களாம். பட்ஜெட் அறிவிப்பில் கதிகலங்கிய பங்குசந்தை

காற்று மாசுபாட்டினை களைய நிதி ஒதுக்கீடு. நபார்டு வங்கி மூலம் 15லட்சம் கோடி கடன் கொடுக்கும் திட்டம். விமானத்துறை விற்பனையை அடுத்து, பாமர மக்களின் நம்பிக்கை நிறுவனமாக இயங்கி வரும் LICயில் உள்ள மத்திய அரசின் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது மற்றும் ஜிஎஸ்டி வரி மூலமாக சராசரி மக்களின் செலவினங்களில் சுமார் 4% குறைக்கப்பட்டுள்ளதாக கூறி.


கன்னித் தீவு கதையை மிஞ்சும் வகையில், விருவிருப்பிற்கு பஞ்சமின்றி.பாராளுமன்ற கட்டிடமே அதிரும் அளவிற்கு, 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று நடுத்தர மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்க. உயர் வருவாய் பிரிவினருக்கு இனிப்பூட்டியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதன்படி 5 முதல் 7.49லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனி நபர் 10 சதவிகித வரியும். 7.5 முதல் 9.99 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் தனி நபருக்கு 15 சதவிகித வரியும். 10 லட்சம் முதல் 12.49 லட்சம் வரை 20 சதவிகித வரியும். 12.50 லட்சம் முதல் 14.99 லட்சம் வரை 25 சதவிகித வரியும். 15 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 30 சதவிகித வரியில் மாற்றம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார் நிதியமைச்சர். 

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி சிறப்பு வர்த்தகத்திற்காக மும்பை பங்குச் சந்தை இன்று திறக்கப்பட்டு வர்த்தகம் நடைபெற்றது. இந்நிலையில் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்து ஒவ்வொரு துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வந்த வேளையில். மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. அதன்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1012 புள்ளிகளும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 300 புள்ளிகளும் சரிந்தன.

கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போதும். இந்திய பங்குச் சந்தை இதே போல் கடும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் மின்னணு துறைகளைச் சேர்ந்த பங்குகளான இந்தியாஃபுல்ஸ் ரியல் எஸ்டேட், மேக்மா ஃபின்கார்ப், இந்தியாஃபுல்ஸ் இண்டெக்ரேடட் மற்றும் ரிலையன்ஸ் பவர் என சுமார் 221 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார வீழ்ச்சியை சந்தித்தன.

வங்கிகளில் உள்ள முதலீட்டு தொகைக்கான உத்திரவாத வரம்பு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகள் மற்றுமின்றி. தனியார் துறை வங்கிகளான யெஸ் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கிகளை மீட்டெடுக்க புதிய மூலதன உதவிகள் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த இந்த வங்கிகளின் பங்குகள், கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

நாட்டின் கலாச்சார கல்வி மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 2500 கோடி செலவில் வரலாற்று ஆராய்ச்சி மியூசியம் அமைக்கப்பட உள்ளதாகவும். தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் நிரந்தர மியூசியம் அமைக்கப்படும் எனவும். சென்னை பெங்களூரு விரைவு வழிச்சாலை, டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை சீர்செய்ய 4400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் பான் கார்டு உடனடியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

விவசாயப் பொருள்களைக் கொண்டு செல்ல தனி ரயில் மற்றும் விமான சேவையை தொடங்க 15 லட்சம் கோடி கடனுதவி செய்ய உள்ளதாகவும். பாரத்நெட் திட்டத்தினை விரிவுபடுத்த ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.

மேலும் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புதியதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படுவதாக தெரிவித்தாலும், மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள வாகன உற்பத்தி துறை வளர்ச்சி திட்டங்கள் பற்றி இந்த‌ பட்ஜெட் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் இன்றைய பட்ஜெட் தாக்கல் எதிரொலியால், இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் விலை ஏற உள்ளதாக அறியப்படுகிறது. அதன்படி சிகரெட், புகையிலை,இறக்குமதி செய்யப்பட்ட காலணிகள் மற்றும் பர்னிச்சர்கள், மின் விசிறிகள் மீதான சுங்க வரி 7.5% லிருந்து 20%ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது எந்த நிலையில் உள்ளன என்றும். உள்நாட்டு உற்பத்தி திறன் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக எந்தவொரு அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

மேலும் 2025ம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பட்ஜெட்டில் சாரம்சங்கள் உள்ளதாக ஆளுங்கட்சியினர் கூறினாலும். அரைத்த மாவை திரும்ப அரைத்து அதற்கு புதிய பெயர் சூட்டி. பட்ஜெட் விழா கொண்டாடி வருகின்றார் நிர்மலா சீதாராமன் என்று குற்றம் சாட்டுகின்றனர் எதிர்க்கட்சிகள்.

மணியன் கலியமூர்த்தி