தமிழகத்தில் கொரோனா பலி 2ஆக உயர்வு! டெல்லி தப்லிக் மாநாட்டுக்கு சென்று வந்தவர் உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த் தொற்றால் தமிழ்நாட்டில் இரண்டாவதாக ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.


விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த ஆண் ஒருவரே இறந்தவர் ஆவார். நேற்று இரவு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர், இன்று காலை 7.44 மணிக்கு உயிரிழந்ததாக தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்துபோன 51 வயது ஆண் நபர், டெல்லி தப்லிக் ஜமாத் நிகழ்வுக்குப் போய்வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநில சுகாதாரத் துறையின் செயலாளர் பீலா, தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் திடகாத்திரமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது. .

முன்னதாக, இரு வாரங்களுக்கு முன்னர் மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவர், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.