மேடம் பாம்பு கடிச்சிருச்சி, காப்பாத்துங்க..! வகுப்பறையில் கதறிய மாணவி! கண்டு கொள்ளாத டீச்சரால் நேர்ந்த விபரீதம்! பதற வைக்கும் சம்பவம்!

திருவனந்தபுரம்: பாம்பு கடித்த சிறுமிக்கு சிகிச்சை தருவதில் தாமதம் செய்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுமி ஷெஹ்லா ஷெரின். 10 வயதான இவர் அங்குள்ள  ஷர்வஜனா ஹெச்எஸ்எஸ் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவி ஷெரினை எதோ ஒன்று கடித்துள்ளது.

பள்ளி வகுப்பறைக்குள் தவறுதலாக நுழைந்த பாம்பு தரையில் ஊர்ந்து சென்று, மாணவியின் இடது காலில் கடித்திருக்கிறது. வலி தாங்காமல் அலறிய மாணவி இதுபற்றி தனது ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். ஆனால், அந்த ஆசிரியர், நகத்தால் காலில் கிழித்துக் கொண்டு, பாம்பு கடித்ததாகக் கூறி நாடகமாடுவதாக, சிறுமியை நம்ப மறுத்துள்ளார். நேரம் செல்ல செல்ல சிறுமியின் இடது கால் நிறம் மாற தொடங்கியுள்ளது.   

  அப்போதும் கூட சிறுமியை கண்டுகொள்ளாத அந்த கொடூர ஆசிரியர், சிறுமி ஷெரினை வகுப்பறையில் இருந்து வெளியே துரத்தியுள்ளார். வகுப்பறைக்கு வெளியே சென்று சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் அவரை நிற்க வைத்த ஆசிரியர் இதுபற்றி சிறுமியின் தந்தைக்கு தகவல் கூறியிருக்கிறார். அதற்கு முன்பாக, உடல் முழுக்க விஷம் கலந்த நிலையில் சிறுமி மிகவும் சிரமத்துடன் இருக்க, ஒருவழியாக, அவரது தந்தை வந்து விசயம் கேள்விப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவர்களோ கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும்படி பரிந்துரை செய்தனர். அங்கு சென்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் விஷம் நன்கு கலந்துவிட்டதால் இனி காப்பாற்ற முடியாது எனக் கூறி கை விரித்துவிட்டனர். ஆசிரியரின் அலட்சியத்தால் சிறுமியின் உயிர் பரிதாபமாக பறிபோனது. இதுதொடர்பாக, சக மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்தவே, தற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர், பள்ளி நிர்வாகம் மீது விசாரணை நடத்தும்படி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.