ஸ்கூல் பீஸ் சீக்கிரம் கட்டிடுறேன்னு சொல்லியும், கேட்க கூடாத கேள்வி கேட்டனர்! வெளியே நிற்க வைத்தனர்! 11ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!

கல்விக் கட்டணம் செலுத்தவில்லையெனக் கூறி பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கீழ அமராவதி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகதாஸ் என்பவரின் 2வது மகள் கிரிஜா வலங்கைமானில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். 

கல்விக் கட்டணம் 20 ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில் தனியார் பள்ளி நிர்வாகம் பலமுறை மாணவியை எச்சரித்துள்ளது. கூலித்தொழிலாளியான முருகதாஸ் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் கல்விக் கட்டணம் செலுத்துவதில் தாமதப்படுத்தி வந்துள்ளார். கடைசியில் எப்படியாவது தீபாவளிக்கு பின்னர் பணம் தருவதாக மகளிடம் உறுதி அளித்திருந்தார். ஆனால் தீபாவளி விடுமுறை முடிந்தும் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவி கிரிஜாவை அழைத்து திட்டியதாக தெரிகிறது. மேலும் பள்ளி வளாகத்தில் வகுப்பறைக்கு வெளியே 2 மணிநேரம் மாணவியை நிற்க வைத்துள்ளனர். இதனால் மனம் வேதனை அடைந்த கிரிஜா அரளி விதையை எடுத்து வந்து அரைத்துக் குடித்தார். பின்னர் மயங்கி விழுந்த அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்விக் கட்டணம் செலுத்தாததால் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் சக மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.