சவுக்கு சங்கர் தினம் தினம் டிராவல்

கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கர் தினம் தினம் ஏதாவது ஒரு கேஸ்க்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு இன்னும் ஒரு மாத காலம் இப்படி அலைச்சல் என்கிறார்கள்.


திருச்சி முசிறி டிஎஸ்பி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில், கோவை சிறையிலிருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு ஆஜராக போலீசார் அழைத்து வந்தனர். பெண் காவலர்கள் புடை சூழ வேனில் அழைத்துவரப் பட்டார் சவுக்கு சங்கர்.

இது குறித்து நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர், ‘’ நீதிமன்றக்காவலில் இருக்கும் போது அவருடைய கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மீண்டும், மீண்டும் காவல்துறை விசாரணைக்கு எடுக்கும் போது அவர் கை எலும்பு முறிவு ஏற்பட்டது போல், நாளை அவர் கால் எலும்பும் முறியும் சூழல் ஏற்படும். ஒரு விவகாரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் வழக்கு போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பெண் காவலர்கள் நேம், பேட்ச் இல்லாமல் அழைத்து வந்ததும், வேனில் அவரை அடித்ததாகச் சொல்லப்பட்ட புகாரில் அழைத்து வந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்’’ எனவும் வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த பெண் காவலர்கள், “வேனில் வரும்போது உங்கள் அனைவரையும் மீடியாவில் கிழிக்கிறேன்” என சவுக்கு சங்கர் மிரட்டியதாகக் குற்றம் சாட்டினார். மற்றொரு பெண் காவலர், “தன் கல்யாணம் ஆகாத நபராக பணியில் இருக்கிறேன். நான் அவருடன் வேனில் பயணிக்கும்போது எனது பெயர் மற்றும் எனது போன் நம்பர் கேட்கிறார். நான் வழங்கி இருந்தால் எனது பெயருக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவார்” எனக் குற்றம் சாட்டினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.