சாவர்க்கர் உண்மையிலே வீரர்தானா? ராகுல்காந்தி சொன்னது சரிதானா?

மன்னிப்பு கேட்பதற்கு என் பெயர் ராகுல் சாவர்க்கர் இல்லை, ராகுல் காந்தி என்று உரக்கக் குரல் கொடுத்தார் ராகுல்.


அம்புட்டுத்தான் சாவர்க்கர் எத்தனை பெரிய வீரர் தெரியுமா, எத்தனை பெரிய தியாகி தெரியுமா என்றெல்லாம் குரல்கள் கேட்கிறது. உண்மையில் சாவர்க்கர்யார்? அவர் கொஞ்ச காலம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது உண்மைதான். ஆனால், அப்போதும் பிரிட்டிஷ் எதிர்ப்பை விட கிறிஸ்தவ எதிர்ப்புதான் மேலோங்கி இருந்தது . சந்தேகம் இருப்பவர்கள் அவர் எழுதிய புத்தகத்தைப் படியுங்கள்.

இந்து என்ற வார்த்தையை இந்துத்துவா என மாற்றியவர் சாவர்க்கர். அந்தமான் சிறையில் இருந்து வெளியேற ஒரு கடிதம் அல்ல இரண்டு கடிதங்கள் அல்ல பல மன்னிப்பு கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதியவர்.

சிறையில் இருந்து வந்ததும் இந்திய சுதந்திரத்துக்கு எதிராக நின்றவர். இந்துக்களையும் முஸ்லீம்களையும் எதிர் எதிராக நிறுத்த காலத்தைச் செலவளித்தவர். பாசிஸ்டுகளையும் நாஜிக்களையும் கொண்டாடியவர். ஜெர்மனி யூதர்களை வெறுத்தவர். அவர்களை இந்திய முஸ்லீம்களோடு ஒப்பிட்டவர். நேருவை விட ஹிட்லர் சிறந்தவர் என்று சொன்னவர்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுபாஷ் சந்திர போஸ் படைக்கு ஆட்களைச் சேர்த்தபோது, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருங்கள் என்று இந்து இளைஞர்களை அழைத்தவர். காந்தியைக் கொன்ற கோட்சேயை ஆத்மார்த்த சீடராகப் பெற்றவர்.

இப்படிப்பட்ட ஒருத்தரைத்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அவர்களுக்காக மோடி அரசும் தூக்கிப் பிடிக்கிறது. ராகுல் சொன்னது சரிதானோ..?