அமிதாப்பையே ரோட்டுக்கு வரவழைத்த இயக்குநர்களிடம் சிக்கிட்டாரே சரவணா ஸ்டோர் அண்ணாச்சி! என்ன ஆகப் போகுதோ?

எதிர் பாராத ஹீரோக்கள் என்ட்ரி கொடுப்பது தமிழ் சினிமாவில் சகஜம்.


அந்தக் காலத்தில் பிரேம் மேனன் என்கிற தொழிலதிபர் இப்படித்தான் ஆழம் தெரியாமல் காலை விட்டார்.அவரே நடித்து இயக்கிய 'குரோதம்' வெற்றி என்றாலும் கையை சுட்டுக்கொண்டதால் ஒதுங்கி விட்டார்.அந்த லிஸ்ட்டில் சமீபகால உதாரணங்கள் ஜே.கே ரித்தீஷும்,பவர்ஸ்டார் சீனிவாசனும்.

இப்படி கையில் காசை வைத்துக்கொண்டு சினிமா ஆசையில் வரும் ஆட்களை வளைப்பதற்கென்றே கோடம்பாக்கத்தில் ஒரு கூட்டம் உண்டு. நமக்கொரு அடிமை சிக்கிட்டாண்டா என்று அந்தக்கூட்டம் சூழ்ந்து கொள்ளும்.சிக்கிய ஆட்டுக்குட்டியின் கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்சி குடித்துவிடும் ஓநாய் கூட்டம் அது.

இப்போது அவர்களிடையே சரவணா அருள் என்கிற அறுபதை நெருங்கும் கொழுத்த ஆடு ஒன்று சிக்கப் போகிறது. அண்ணாச்சி தமன்னாவுடன் டூயட் பாடப்போகிறார். இயக்கப்போவது இரட்டை இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி என்று செய்தி பரவுகிறது. ஜேடிஜெர்ரியின் ட்ராக் ரெக்கார்ட் அண்ணாச்சிக்குத் தெரியாதா?.

அவர்கள் 1997ல் 'உல்லாச்ம்' என்கிற தங்களது முதல் படத்தை எடுத்தார்கள்.இன்று உச்சத்தில் இருக்கும் அஜித்தும் விக்ரமும் இணைந்து நடித்த படம் அது.தயாரித்தது இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் ஏ.பி.சி கார்ப்பரேஷன்.அந்த உல்லாசம் படத்தால் உல்லாசம் அடைந்தது ஜேடிஜெர்ரி இரட்டையர் மட்டுமே.

அமிதாப்பின் ஏபிசி கார்ப்பரேஷன் மூடப்பட்டு அவர் கிட்டத்தட்ட தெருவுக்கே வந்துவிட்டார்.அவர் கோனபனேகா குரோர்பதி டி.வி தொடரில் தோன்றித்தான் கடனில் இருந்து மீண்டார்.அதற்கப்புறம் ஜேடிஜெர்ரிக்கு அடுத்த படம் கிடைக்க ஆறு வருடம் ஆனது.2003ல் அர்பன் லெஜெண்ட் என்கிற ஹாலிவுட் படத்தை தமிழில் தழுவி விசில் என்ற படத்தை எடுத்தார்கள்.

ஹீரோ விக்கிரமாதித்யா என்கிற புதுமுகம்.ஹீரோயின் இப்போது பிக்பாசில் வரும் ஷெரீன்.தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவில் கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்த பெண்ட்டா ஃபோர் நிறுவனம்.இதன் தொழில் நுட்ப ஆலோசகர் சுஜாதா.இந்தப்படமும் வாஷ் அவுட்.அந்த நிறுவனமும் மூடப்பட்டது.

அதற்குப் பிறகு ஜேடிஜெர்ரி சரவணா ஸ்டோர் அண்ணாச்சியை பிடித்தார்கள்.தனது கடை விளம்பரத்தில் சீரியல் நாயகிகளுடன் டான்ஸ் ஆடத்துவங்கிய அண்ணாச்சி படிப்படியாக வளர்ந்து தமன்னா வரை வந்துவிட்டார். அடுத்து ஹீரோ ஆகப்போகிறாராம்.விரைவில் அண்ணாச்சிக்கு மேக்-அப் போட ஹாலிவுட்டில் இருந்து ஆள் வரலாம்.முதல் படமே 30 கோடி பட்ஜெட்டாம்.பாவம் அண்ணாச்சி!.