சீமானை விமர்சித்த ரஜினி ரசிகருக்கு விரட்டி விரட்டி அரிவாள் வெட்டு! நாம் தமிழர் கட்சியினர் வெறிச் செயல்!

சேலம் அழகாபுரம் பகுதியில் ரஜினி ரசிகர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்ய முயற்சி நடந்தது.


சேலம் மாவட்டம் இரும்பாலை அருகில் உள்ளது கருக்கல்வாடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ரஜினி பழனிச்சாமி  வயது 46. இவர் சேலம் அழகாபுரம் பகுதியில் கால் டாக்ஸி ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இன்று காலை 10 மணி அளவில் ரஜினி பழனிச்சாமி அழகாபுரம் வந்து தனது காரை எடுக்க நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் ரஜினி பழனிச்சாமியை சரமாரியாக வெட்டியது.

3 பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் வெட்டியதால் ரத்தவெள்ளத்தில் ரஜினி பழனிச்சாமி கீழே சரிந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்து ரஜினி பழனிச்சாமியை தூக்கினர்.

 இதனை தொடர்ந்து ரஜினி பழனிசாமியை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பியது. படுகாயமடைந்த ரஜினி பழனிச்சாமியை பொதுமக்களும், அழகாபுரம்  போலீசாரும் இணைந்து சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் ரஜினிபழனிச்சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினி பழனிச்சாமி  நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இதனால் தான் தனது  பெயரான பழனிசாமியுடன் ரஜினியை சேர்த்துக் கொண்டார். ரஜினி பழனிச்சாமி வாட்ஸ் அப்  மற்றும் ஃபேஸ்புக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியை கிண்டல் கேலி செய்து வந்தார்.

அதாவது ரஜினியை கேலி கிண்டல் செய்யும் நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அவர் பதிலடி கொடுத்து வந்தார்.

இதனால்  கோபமடைந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் இன்று காலை ரஜினி பழனிச்சாமியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி இருப்பது போலீசார் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

3 பேர் கும்பலால் வெட்டு காயம் பட்ட ரஜினி பழனிச்சாமி  ரத்தம் சொட்ட சொட்ட தனது செல்போனில் வீடியோவில் படம் பிடித்து அதை மற்ற நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த வீடியோவையும் போலீசார்  கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அழகாபுரம்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள் .

விமர்சனத்திற்கு பதில் அளித்த ரஜினி ரசிகரை நாம் தமிழர் கட்சியினர் கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.