குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்க: கெஞ்சிய முதியவர்! சேலம் மருத்துவமனையில் நேர்ந்த பரிதாபம்!

சேலம் அரசு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் நிர்வாண நிலையில், குடிக்க தண்ணீர் கேட்டு கதறிய சம்பவம் நெஞ்சை பதைபதைக்க செய்துள்ளது.


சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அவரை கவனிக்க யாரும் உறவினர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. தனியாளாக இருக்கும் அவருக்கு, திடீரென தண்ணீர் தாகம் எடுத்துள்ளது.

இதன்பேரில், படுக்கையில் இருந்து எழ முயன்ற அவர் அப்படியே கீழே விழுந்துவிட்டார். இதில், உடலில் இருந்த துணி அவிழ்ந்துவிட, அவர் நிர்வாண நிலையில் கிடந்துள்ளார்.  அந்த நிலையிலேயே, கையில் வாட்டர் பாட்டிலுடன் அவ்வழியே வருபவர்களிடம், யாராவது கொஞ்சம் தண்ணி கொடுங்களேன், என்று முதியவர் கெஞ்சிய காட்சி பார்ப்பதற்கே வேதனையாக இருந்தது. 

இதுபற்றி மருத்துவமனை ஊழியர்கள் குறிப்பிடுகையில், ''தண்ணீர் பஞ்சம் காரணமாக, இங்கு சரியாக குடிநீர் கிடைப்பதில்லை. தண்ணீர் எடுக்க வேண்டுமெனில், 3வது மாடியில் இருந்து இறங்கி, தரைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

ஆனால், இந்த முதியவர் அடிக்கடி இவ்வாறு தண்ணீர் கேட்கிறார்.  ஆள் இல்லாத நேரங்களில் கீழே விழுந்து இப்படி புரள்கிறார். இது மிகவும் வேதனையாக உள்ளது. இதுபற்றி மருத்துவமனை டீனிடம் சொல்லி தண்ணீர் பஞ்சத்தை சரிசெய்ய கேட்டுக் கொண்டுள்ளோம்,'' என தெரிவித்தனர்.