செந்தில் பாலாஜியை தோற்கடிக்க சைதை துரைசாமி! எடப்பாடியின் அரவக்குறிச்சி பிளான்!

ஆளும் அ.தி.மு.க. கட்சியின் பலம் வாய்ந்த கொங்கு ஏரியாவை, தி.மு.க.வுக்குக் காட்டிக்கொடுத்த பெருமை செந்தில் பாலாஜிக்குத்தான் சேரும். ஏனென்றால், அத்தனை தொகுதிகளிலும் அ.தி.மு.க. மட்டுமே முன்னணியில் இருந்தது. இப்போது சகல திசைகளிலும் திணறுகிறது.


அதனால் செந்தில்பாலாஜி அ.ம.முக.வுக்குப் போனதைவிட, தி.முக.வுக்குப் போனதை எண்ணி கடும் கோபத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் அந்தத் தொகுதி தேர்தலை தள்ளிவைக்க முயற்சி செய்தார். அந்தத் தொகுதிகளுக்குத் தனியே தேர்தல் நடக்கும்போது, எளிதில் அவரை தோற்கடிக்க முடியும் என்று திட்டமிட்டார்

அந்தத் திட்டம் ஓரளவு மட்டுமே பலித்திருக்கிறது. இப்போது அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி நிற்பதை தி.மு.க. உறுதி செய்திருக்கிறது. இப்போது ஜோதிமணியை ஜெயிக்கவைக்கவே முழுமூச்சுடன் பாடுபடும் செந்தில் பாலாஜி, தனக்காக இன்னமும் அதிகமாக மெனக்கெடுவார்.

அதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணியிடம் பேசி,  எப்படியாவது செந்தில்பாலாஜியை தோற்கடிக்க வேண்டும் என்று ஆர்டர் போட்டாராம். அவருக்கு எதிராக யாரை நிறுத்தலாம் என்று யோசித்த எடப்பாடிக்கு கரூர் மக்கள்தான் சைதை துரைசாமியின் பெயரை சொல்லியிருக்கிறார்கள். கரூர் சைதை துரைசாமியின் சொந்தத் தொகுதி என்பதால், அங்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்திருக்கிறார்.

மேலும் அரவக்குறிச்சி தொகுதியில் பெரும்பாலான வீடுகளில், சைதை துரைசாமியின் மனிதநேயத்தில் படித்து டி.என்.பி.எஸ்.சி. முதல் ஐ.ஏ.எஸ். வரை படித்த மாணவர்கள் இருக்கிறார்கள். அதனால் மிக எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று கணக்குப் போட்டு சொல்லியிருக்கிறார்கள்.

அதனால் நீங்கள்தான் செந்தில் பாலாஜியை தோற்கடிக்க வேண்டும் என்று சைதை துரைசாமியிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் எடப்பாடி. இந்த நேரத்தில் தகவல் அறிந்து செந்தில் பாலாஜியும் அவருக்கு நெருக்கமான நபர் மூலமாக, தயவுசெய்து நிற்க வேண்டாம் என்று சைதை துரைசாமிக்கு வேண்டுகோள் வைத்து வருகிறார்.

சைதை துரைசாமி இல்லையென்றால், கே.சி.பழனிசாமியை நிறுத்தலாம் என்று திட்டமிட்டு வருகிறார்களாம். எப்படியோ சரியான போட்டி நடக்கும் என்றே நம்புவோம்.