விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க இது ஒன்று தான் தீர்வு! சத்குருவின் ஈஷா கூறும் அசத்தல் யோசனை!

ஈஷா வேளாண் காடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேச்சு மரம் சார்ந்த விவசாயம் செய்வதன் மூலம் விவசாயிகளின் தற்கொலையை தடுத்து அவர்களின் பொருளாதாரத்தை பல மடங்கு உயர்த்த முடியும் என ஈஷா வேளாண் காடுகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன் கூறினார்.


ஈஷா வேளாண் காடுகள் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா மேவானி கிராமத்தில் ‘மரங்களுக்கிடையே விவசாயம் மகத்தான வருமானம்’ என்ற தலைப்பில் ஒரு நாள் விவசாய கருத்தரங்கு இன்று (டிசம்பர் 22) நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 700 விவசாயிகள் பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கில் வெற்றிகரமாக மரம் சார்ந்த விவசாயம் செய்து வரும்  முன்னோடி விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தோட்டத்தின் உரிமையாளரும் முன்னோடி இயற்கை விவசாயியுமான திரு.செந்தில் குமார் பேசுகையில், “நான் 17 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாக மரம் சார்ந்த விவசாயம் செய்து வருகிறேன்.

மஞ்சள், கரும்பு, வாழை, சேனை போன்ற பணப் பயிர்களுடன் மரங்களையும் வளர்த்து வருகிறேன். மரங்களின் இலை, தழைகள் மண்ணில் விழுந்து மக்குவதால் மண் வளம் அதிகரித்துள்ளது. பயிர்களின் தரமும் விளைச்சலும் அதிகரித்துள்ளது. மஞ்சளில் ஏக்கருக்கு 10 குவிண்டால் மகசூல் எடுத்த நான் இப்போது 25 குவிண்டால் வரை மகசூல் எடுக்கிறேன்.

மேலும், இயற்கை விவசாயத்துடன் சேர்ந்து மஞ்சள் தோட்டத்தில் மரங்கள் வளர்ப்பதால் இங்கு விளையும் மஞ்சளில் குக்குமீன் அளவு  அதிகமாக உள்ளது. இதனால், ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை  குவிண்டால் ரூ.7,000 ஆக இருந்த போது நான் என் மஞ்சளை ரூ.12,500-க்கு விற்பனை செய்தேன்.

இந்தாண்டு ஏக்கருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் நிகர லாபம் எடுத்துள்ளேன். இதுதவிர, என்னுடைய 8 ஏக்கர் தோட்டத்தில் இருக்கும் மரங்களின் தற்போதை சந்தை மதிப்பு ரூ.1 கோடி ஆக உள்ளது” என்றார்.

ஈஷா வேளாண் காடுகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன் பேசுகையில், “வறட்சி, தண்ணீர் மற்றும் வேலை ஆட்கள் பற்றாகுறை போன்ற பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயம் நல்ல தீர்வாக உள்ளது. நம் முன்னோர்கள் பல வகை மரங்களுடன் மரம் சார்ந்த விவசாயம் தான் செய்து வந்தனர்.

ஆனால், இடையில் ரசாயன உர நிறுவனங்களின் தவறான  ஆலோசனைகளால் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டோம். மரங்கள் இல்லாததால் மண் வளம் குன்றி, தண்ணீர் பஞ்சத்தையும்  பருவநிலை பாதிப்புகளையும் சந்தித்து வருகிறோம். இந்நிலையில், மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை பல மடங்கு உயர்த்த முடியும் என்பதை நாங்கள் அனுபவப்பூர்வமாக பார்த்து வருகிறோம்.

விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கும் இது நல்ல தீர்வாக இருக்கும்” என்றார். ஊத்தங்கரையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி திரு.கணேசன் மரங்களின் விற்பனை வாய்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து பேசினார். அவர் பேசுகையில், “இந்தியாவில் மரங்களின் தேவை அதிகமாக உள்ளது.

ஆனால், அதற்கேற்ப உற்பத்தி இல்லை. அதனால், பல ஆயிரம் கோடி மதிப்பிலான மரப் பொருட்களையும் மரங்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். விவசாயிகள் செம்மரம், சந்தன மரம் போன்ற சில மதிப்புமிக்க மரங்களை வளர்த்து வெட்டி விற்பதில் சில சட்ட ரீதியான தடைகளை சந்தித்து வருகின்றனர். அதை நீக்குவதற்கு சத்குரு அவர்கள் செயல் செய்து வருகிறார்.

மரம் சார்ந்த விவசாயத்தில் அரசின் கொள்கை அளவில் மாற்றம் கொண்டு வரும் பணியை ஈஷா செய்து வருகிறது. டிம்பர் போர்டு உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து இடர்பாடுகளும் நீக்கப்பட்டு விடும் என நம்புகிறேன்” என்றார். பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு.வள்ளுவன் பல அடுக்கு மாதிரி முறையில் பல பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்டும் வழிமுறை குறித்து தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

ஈஷா விவசாய இயக்கத்தின் பயிற்சியாளர் திரு. முத்துக்குமார் தற்சார்பு விவசாயத்தின் அவசியம் மற்றும் இயற்கை விவசாயத்தின் பயன்கள் குறித்தும் பேசினார். முன்னோடி விவசாயிகளின் அனுபவ உரைகளுக்கு பிறகு அனைத்து விவசாயிகளும் தோட்டத்தை சுற்றி பார்க்கும் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடந்தது.

அதை தொடர்ந்து கேள்வி பதில் அமர்வுடன் கருத்தரங்கு மாலையில் நிறைவு பெற்றது.