மாஸ்க் கேட்டதற்கு பணி இடை நீக்கமா? ராமநாதபுரம் அதிர்ச்சி!

கவசம் கேட்டதற்காக இடைநீக்கம் ஆன தூய்மைப்பணியாளர்,ஆட்சியர் தலையிட்டதால் வேலை தற்காலிகமாகத் தப்பியது.


பாதுகாப்பு கவசம் உள்பட்ட வசதிகள் கேட்டதற்காக துப்புரவுப் பணியாளரை இடைநீக்கம் செய்த சம்பவமும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டதை அடுத்து அந்த ஊழியரின் வேலை தற்காலிகமாகத் தப்பியதும் வெளியில் வந்துள்ளது. உள்ளாட்சிப் பணியாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலர் ம.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், உள்ளாட்சியி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் அரசு அறிவித்துள்ள சில பலன்களை வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அந்த அறிக்கை விவரம்: ” நோயுற்றவர்களை காப்பாற்ற மருத்துவர்கள் மிகப்பெரும் சேவையாற்றி வருகின்றனர். அதே நேரத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தும் முக்கியமான பணியில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இயற்கைப் பேரிடர் மற்றும் பண்டிகை காலங்களில் தமது சொந்த நலன்களை தள்ளி வைத்துவிட்டு அரும் பணியாற்றும் இவர்களை கௌரவிக்கும் வகையில் “தூய்மை பணியாளர்கள்” என்று அழைப்பது என தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

ஆனால் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் பணியில் நேரடியாக ஈடுபடுத்தப்படும் இவர்களுக்கு, தற்காத்துக்கொள்வதற்கான முகக் கவசம், கையுறைகள், போதிய சோப்பு, சானிடைசர் போன்றவை இதுவரை போதிய அளவு வழங்கப்படவில்லை.

பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டதற்காகவே இராமநாதபுரம் நகராட்சியின் தூய்மைப் பணியாளரும், எமது சங்க முன்ண்ணி ஊழியருமான கே. பாலு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு கண்டது வரவேற்கத் தக்கது. உள்ளாட்சி நிறுவனங்களில் போதிய நிதி இல்லை என்பது உண்மையாய் இருக்கலாம்.

ஆனால் இந்த நெருக்கடி நேரத்தில், பணமில்லை என பாதுகாப்பின்றி தொழிலாளர்களை களமிறக்கக் கூடாது என்ற அரசின் நிலைபாடு உள்ளாட்சிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க ஏற்பாடு செய்யவேண்டும். போதிய நிதியை அரசு விடுவிக்கவேண்டும்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைக் காவலர்கள் 1,20,000 பேருக்கு மேல் பணி புரிகின்றனர். இவர்களுக்கோ மிக அற்ப உதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.80/- முதல் 100 வரையே வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; பெரும்பாலோர் பெண்கள்.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள்,மருத்துவப்பணியாளர்கள் மற்றும் மருத்துவ மனையிலேபணி புரியும் தூய்மைப்பணியார்கள் ஆகியோருக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். 

அதே நேரத்தில் உயிரை பணயம் வைத்து அன்றாடம் மக்கள் வாழும் பகுதிக்கு வந்து பல மணிநேரம் குப்பைக் கழிவுகளையும், சாக்கடைகளையும் அப்புறப்படுத்தி மக்களின் பொது சுகாதாரத்தை பாதுக்காக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் தூய்மைப்பணியாளர்கள் உள்பட்ட உள்ளாட்சிப் பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும். 

தூய்மைப்பணியில் ஈடுபடும் தொழிலாளிகளில் 80 விழுக்காட்டினர் ஓய்வு பெறும் வயதுக்கு முன்பே இறந்து விடுகின்றனர் என்று தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணைய ( national Commission for safai karamcharis) அறிக்கை கூறுகின்றது. நோய் தொற்றுக் காலத்தில் நோய் உற்பத்தியாகும் களத்தில் இருப்பதோடு, வேலைப்பளுவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

 தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, 40 ஆண்டுகள் கழித்து 2017 ஆம் ஆண்டு தான் குறைந்த பட்ச ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த ஊதியத்தை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்திரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதையும் பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, சிற்றூராட்சிகளின் உள்ளாட்சி நிர்வாகங்கள் வழங்கவில்லை. குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 இல் குறிப்பிட்டவாறு கணக்கிட்டு ஊதியத்தை வழங்க அரசு அவசர நடவடிக்கை வேண்டும்.

தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தினந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும். துப்புரவுப் பணிக்கு என்று நியமணம் பெற்ற தலித் அல்லாத தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப் படுவதில்லை. அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டு அலுவகத்தில் வேலை வாங்கப்படுகிறது.

எழுதப்படாத விதியாக தமிழகமெங்கும் பரவலாக இந்த நடை முறை கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்தில் மிகப்பெரும் விளம்பரத்தோடு கோவை மாநகராட்சியில் உயர் கல்வி பயின்றவர்கள் வேலை நியமணம் பெற்றனர். அதில் தலித் அல்லாத 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் அடக்கம். உலகமே கொடிய தொற்றை எதிர்த்து போராடும் வேலையிலும் பெரும்பாலான தலித் அல்லாத தொழிலாளிகளுக்கு அவர்களுக்கு, உரிய வேலையை வழங்காமலிருப்பது சாதிப் பாரபட்சம் காட்டுவதாகும்.

இது சட்டவிரோதமானதாகும்.எனவே துப்புரவுப் பணிக்கென்று வேலைக்கு எடுக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் அப்பணியில் ஈடுபடுத்தப் படுவதை இந்த நேரத்திலாவது உரிய வகையில் உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்றை முன்னின்று எதிர்கொள்ளும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட்டோருக்கு ரூ50 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்ற 26-03-2020 தேதிய மத்திய அரசின் அறிவிப்பினையொட்டி உள்ளாட்சித் துறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளடங்கிய பாகுபாடின்றி அனைத்து தூய்மைப்பணியாளர்களுக்கும் வழங்கபபடுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.” என்று உள்ளாட்சிப் பணியாளர் சம்மேளனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.