ராமதாஸ் வெளியிட்ட நிழல் பட்ஜெட்..! ஒருதலைக்காதலுக்கும் மோசடி திருமணத்துக்கும் ஸ்பெஷல் திட்டம்

அரசாங்கத்தின் சார்பில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை வைக்கப்படுவதைப் போல, பா.ம.க. சார்பில் ஆண்டுதோறும் நிழல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.


பா.ம.க.வின் 18ஆவது ஆண்டு நிழல் பொது நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு சென்னையில் இன்று வெளியிட்டார். தாங்கள் ஆளும் கட்சியாக அமைந்தால் என்னென்ன செய்வோம் என்பதாக அதில் பல்வேறு திட்டங்களும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஆண்டு அறிக்கையில் 97 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தை உயர் சிறப்பு மையமாக அறிவித்ததன் மூலம் மைய அரசு அதைக் கைப்பற்றப் போகிறது என எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அப்படியான உயர் மையத்தை ஆதரித்தும் அதே சமயம் அதன் சேர்க்கை முறையில் மாற்றமில்லை என்றும் மாநிலத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் இணைப்பை கவனிக்க தனியான அண்ணா பல்கலை. அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

” * தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த மாநில திட்டக்குழு போன்று, மாநிலப் பொருளாதார ஆணையம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். * தமிழ்நாட்டில் மகளிர் நாளான மார்ச் 8ஆம் தேதி முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

* மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்.

* தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவுபெறும் பள்ளிகளில் மதிய வேளையில் சத்துணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக காலை உணவும் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கும் 2020 மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும்.

* ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிக் காவல் பிரிவு ஏற்படுத்தப்படும். இப்பிரிவுக்கு தமிழக காவல்துறையில் உள்ள மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைவராக நியமிக்கப்படுவார். மோசடித் திருமணங்கள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்கவும் இப்பிரிவு நடவடிக்கை எடுக்கும்.

* சென்னை & சேலம் எட்டுவழிச்சாலை உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடும் என்பதால் உழவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அத்திட்டம் கைவிடப்படும்.

* அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வெளிப்படைத்தன்மை ஆணையம் என்ற புதிய சட்டப்பூர்வ அமைப்பை தமிழக அரசு உருவாக்கும். இது தகவல் பெறும் உரிமை ஆணையத்தைவிட வலிமையான அமைப்பாக இருக்கும்.

* அதிகாரிகள் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் தங்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு பொறுப்புடைமை ஆணையம் என்ற புதிய சட்டபூர்வ அமைப்பு ஏற்படுத்தப்படும். முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளால் மாநில அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலோ,

ஊழல் நடந்தாலோ அதற்கு சம்பந்தப்பட்டவர்களை பொறுப்பாக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுதான் இந்த ஆணையத்தின் பணியாகும்.” என்பன உள்பட 97 திட்டங்கள் பா.ம.க.வின் நிழல் நிதிஅறிக்கையில் இடம்பெற்றுள்ளன.