அதிமுகவில் ராஜ்யசபா சீட்! வன்னியருக்கு ஒன்னு! கவுண்டருக்கு ஒன்னு!

நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் கவுண்டர் மற்றும் வன்னியருக்கு தலா ஒரு எம்பி சீட்டை கொடுக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் ஆக உள்ள 6 பேரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 6 இடங்களில் தற்போது சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் திமுக மற்றும் அதிமுக தலா 3 எம்பி பதவிகளைப் பெற முடியும்.

அதிமுகவைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலின் போதே பாமகவிற்கு ஒரு ராஜ்யசபா எம்பி சீட் கொடுக்கப் படும் என்று உறுதி அளித்திருந்தது. அதன்படி அக்கட்சிக்கு ஒரு எம் பி சீட்டை கொடுத்துவிட்டார் மேலும் 2 எம்பி சீட்டுகள் அதிமுக வசம் உள்ளன.

இந்த 2 எம்பி சீட்டுகளுக்கு அதிமுகவில் தற்போது கடுமையான லாபி நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி தனக்கு ஆதரவாக இருக்கும் இரண்டு பேரை எம்பியாக்க காய் நகர்த்தி வருகிறார். இதேபோல் ஓபிஎஸ்சும் தன்னுடைய ஆதரவாளர்களை எம்பியாக்க நடவடிக்கைகளை துவங்கியுள்ளார்.

வழக்கமாக ராஜ்யசபா எம்பி என்பது அதிமுகவில் ஜாதி அடிப்படையில் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை மக்களவையில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் மகன் எம்பி யாக இருக்கிறார். எனவே தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயமாக இருக்கக்கூடிய கவுண்டர், வன்னியர், நாடார், தாழ்த்தப்பட்டோர் ஆகிய சமுதாயத்திலிருந்து இரண்டு பேரை அதிமுக எம்பி ஆக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இரண்டு பேருக்கு மட்டுமே எம்பி பதவி கொடுக்க முடியும் என்பதால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கவுண்டர் சமுதாயத்தின் பிரதிநிதி ஒருவருக்கும் வட மாவட்டத்தைச் சேர்ந்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அதிமுகவில் எம்பி பதவி வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.