ஆன்மிக அரசியல் பேசிவரும் ரஜினிகாந்தும், ஆன்மிகத்தைக் குழப்பிவரும் கமல்ஹாசனும் கூட்டுக்களவாணிகள் தானாமே..!

ஆன்மிக அரசியல் என்று பேசிவரும் ரஜினிகாந்தும், ஆன்மிகத்தைக் குழப்பிவரும் கமல்ஹாசனும் கூட்டுக்களவாணிகள்தான்.


ஒருத்தரு தன்னை ஒளித்துக் கொள்ள முடியாமல் வெளிப்படுத்திக்கிட்டார்!மற்றவரோ, தன்னை மறைத்துக் கொள்ள முயற்சித்து மாட்டிக்கிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் பதிவு வெளியிட்டுள்ளார்.

கருப்பர் கூட்ட விவகாரத்தில் தான் ‘வெறுப்பர்’ பக்கம் நிற்பதை பகிரங்கப்படுத்திக் கொண்டார் ரஜினி! அடேங்கப்பா..! எங்க முருகனைப் பற்றி எங்களுக்கில்லாத அக்கறை உனக்கென்னப்பா…? இமயமலைக்கு அடிக்கடி போகும் நீங்க பழனிமலைக்கு எப்ப போயிருக்கீங்க... கமலஹாசனோ கமுக்கமாக இருந்துவிட்டார்! ‘’நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா..?’’ என்று அமைதி காத்துக் கொண்டார் அம்பி! 

சுற்றுச் சூழலை சூறையாடிக் கொள்ள, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை சட்டப்படி அங்கீகரிக்க.. ஒரு பேரழிவுத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருகிறது! இருவரும் மெளனம் சாதிக்கிறார்கள். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தருகிறது உயர் நீதிமன்றம். இருவரும் வாய் திறக்க மறுக்கிறார்கள்!

அதி பயங்கரமான கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது....! இனி ஆரம்ப கல்விப் பாடதிட்டத்தைக் கூட மத்திய அரசு தான் வடிவமைத்துத் தருமாம்! அந்த உரிமை கூட மாநில அரசிடமிருந்து பறிபோகவுள்ளது. ஆரம்ப கல்வி என்பது உலகம் முழுமையுமே கூட அந்தந்த மண்,அவற்றின் கலாச்சாரம் சார்ந்து அந்தந்த மக்களால் தான் உருவாக்கப்படுகிறது. இது பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் திட்டம்!

இந்தியா போன்ற பல மொழிகள்,பல இனங்கள்,பல கலாச்சாரங்கள் உள்ள நாட்டில் அனைத்தையும் உருத்தெரியாமல் அழிக்கும் கெடு நோக்கம் கொண்டது இந்த புதிய கல்விக் கொள்கை! இது மட்டுமின்றி, சகல மக்கள் பிரிவையும் உயர்சாதிக் கண்ணோட்டத்தில் ஒரேவிதமாக கட்டமைக்க நினைக்கும் இதை நான் கல்விக் கொள்கை என சொல்லவே மாட்டேன்!

இது கபடதாரிகளின் கயமைக் கொள்கை. மருத்துவ கல்வி படிக்க நீட் கொண்டு வந்தது போல கலை,அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிக்கவும் நுழைவு தேர்வு என்பது இருக்கும் அநீதி போதாது என்று மேலும்,மேலும் செய்யும் கொடுமையாகும்!

விருப்ப பாடமாக சமஸ்கிருதம் ஏன் கொண்டுவர வேண்டும்? இந்தியைக் கூட பெரும்பாலான இந்திய மக்களின் பேசுமொழி எனக் கொள்ளலாம்! ஆனால்,சமஸ்கிருதம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் வெறும் வழிபாட்டு மொழிதானே! அதை மற்றவர்கள் படித்தாலுமே கூட அவர்களை ஒரு போதும் நீங்கள் அர்சகர்களாக அங்கீகரிக்க போவதில்லையே!

அவனவன் தாய்மொழியில் அவனவன் ஆண்டவனை கும்பிடுவது கூட உங்களுக்கு பொறுக்க முடியவில்லையா? இப்படிப்பட்ட கல்விக் கொள்கையைத் தான் கமலஹாசன் உடனே ஆதரித்து அறிக்கை கொடுக்கிறார்! இவ்வளவு ஆபத்தான அம்சங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை மட்டும் வரவேற்கிறார்! 

அடப்பாவி! இந்த கூடுதல் நிதி என்பது பலியிடப் போகிற ஆட்டுக்கு அணிவிக்கப்படும் பூமாலை என்பதை எப்படி நாசூக்காக மறைக்கப் பார்க்கிறீர்கள். நீங்கள் இருவருமே அரசியலுக்கு வந்து தமிழக மக்களை ஆளத் துடிக்கிறீர்கள்!. ஆனால்,அரசியலில் தங்களை சம்மந்தப்படுத்தி கொள்ளாத அண்ணன் தம்பிகளான சூர்யாவும், கார்த்தியும் கல்வியிலும், சுற்றுச் சூழலிலும் அக்கறை காட்டுகிறார்கள்!

சென்ற ஆண்டு மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கூட தகுதி தேர்வு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை சூர்யா கண்டித்தார். தற்போது சுற்றுச் சூழல் வரைவு மதிப்பீட்டை (EIA 2020) கார்த்தி எதிர்த்துள்ளார். ஏனென்றால்,கடந்த சில ஆண்டுகளாக அவர் இயற்கை விவசாயத்தில் இறங்கி தீவிர ஆர்வம் காட்டிவருகிறார். அதனால்,உள்ளபடியே மனம் பதைத்து அறிக்கை தருகிறார். இவர்கள் இருவரும் சிவகுமார் பெற்ற சிங்கங்கள். கொங்கு மண்ணில் முகிழ்த்த தங்கங்கள்!

நீங்கள் இருவரும் மிகச் சிறந்த கலைஞர்கள்தான். ஆனால்…,? அம்பலப்பட்டு நிற்கிறீர்களே என்று தெரிவித்துள்ளார் சாவித்திரி கண்ணன்.