சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் வெளியான ஏழு நாட்களில் 500 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களான சல்மான் கான்,அமீர் கானின் சாதனைகளை எல்லாம் தூள் தூளாக்கியுள்ளது.
7 நாட்களில் ரூ.500 கோடி வசூல்! பாகுபலி சாதனையை தகர்த்த ரஜினி!

கடந்த 29ந் தேதி ரஜினி – அக்சய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.ஓ திரைப்படம் வெளியானது. வெளியானது முதலே படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினரின் ரசிகர்களையும் 2.ஓ திரைப்படம் கவர்ந்து வருகிறது. அதுவும் 2.0 படம் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்து வருகிறது. 3டியில் படத்தை பார்க்க வேண்டும் என்று திரையரங்குகளை ரசிகர்கள் தொடர்ந்து மொய்த்து வருகின்றனர்.
சென்னையில் பிரபல
ரோஹினி திரையரங்கம் திங்களன்றும் தங்களுக்கு மாலை காட்சி ஹவுஸ் புல் ஆனதாக ட்விட்டரில்
தெரிவித்தார். திங்களன்றும் திரையரங்குகள் ஹவுஸ் புல் ஆவது இதுவே முதல் முறை என்றும்
அவர் கூறியிருந்தார். குறிப்பாக 3டியில் படம் பார்க்க குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர்.
இதனால் பள்ளி முடிந்த பிறகு குழந்தைகள் தங்கள் பெற்றோரை அழைத்துக் கொண்டு திரையரங்கிற்கு
வந்துவிடுகின்றனர்.
அதுவும் 3.ஓ குட்டி ரோபோவாக ரஜினி தோன்றுவது குழந்தைகளை குதூகலிக்கச் செய்துள்ளது. இதனால் படம் வெளியான நாள் முதல் தற்போது வரை கட்டுப்பாடு இன்றி வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. படம் வெளியாகி நேற்றோடு 7 நாட்கள் கடந்த நிலையில் ஒட்டு மொத்தமாக 500 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக இந்த படத்தில் ஹிந்தியில் வெளியிட்டுள்ள இயக்குனர் கரன் ஜோகர் கூறியுள்ளார்.
படம் வெளியான வியாழன் அன்று உலகம் முழுவதும் 117 கோடி ரூபாயை வசூலித்த 2.ஓ இரண்டாவது நாளில் 74 கோடி ரூபாயை வசூலித்து கொடுத்தது. மூன்றாவது நாளில் வசூல் 91 கோடி ரூபாயாக இருந்தது. 4வது நாளில் 2.ஓ வசூலித்த தொகை 123 கோடி ரூபாய். 5வது நாளான திங்களன்று 2.ஓ திரைப்படம் 46 கோடி ரூபாயும், 6வது நாளில் 40 கோடி ரூபாயும் வசூலித்துக் கொடுத்திருந்தது 2.ஓ. இந்த நிலையில் 7வது நாளான நேற்றும் உலகம் முழுவதும் சுமார் 40 கோடி ரூபாய் வசூலித்து 500 கோடி ரூபாய் கிளப்பில் 2.ஓ இணைந்துள்ளது.
இந்தி திரையுலகின்
வசூல் சக்ரவர்த்திகள் என்று அழைக்கப்படும் சல்மான் கான், அமீர் கானின் படங்கள் கூட
இதுவரை 7 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை தொட்டதில்லை. பாகுபலி படத்தின் முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூலிக்க 4 வாரங்கள் அதாவது கிட்டத்தட்ட 25 நாட்கள் ஆனது. ஆனால் 2.ஓ 7 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளது.