மீண்டும் ராஜபக்ஷே வந்துட்டாரே..! மோடியின் நண்பன், தமிழருக்கு எதிரியா..?

இலங்கையில் பிரதமருக்குத் தேர்தல் நடந்து ராஜபக்ஷே ஜெயித்தேவிட்டார்.


இதுகுறித்து வாழ்த்து கூறிய இந்தியப் பிரதமர் நன்றியும் கூறியிருக்கிறார். அதேநேரம், ராஜபக்ஷே வெற்றி குறித்து பிரபல பத்திரிகையாளர் மாலன் என்ன பதிவு போட்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள். 

எதிர்பார்த்த வண்ணமே இலங்கைத் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. வாக்குப் பதிவுக்கு முன்னர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி நான் ராஜபக்க்ஷேயின் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் இரண்டாம் இடம் சஜித் பிரமதாசாவின் கட்சிக்குக் கிட்டும் என்ற கணிப்பைப் பகிர்ந்திருந்தேன்.

நேற்று வாக்குகள் எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது, நேற்றைக்கு இட்டிருந்த பதிவில் அரச்மைப்புச் சட்டத்தைத் திருத்துமளவிற்கான பெரும்பான்மையை ராஜபக்க்ஷேயின் கட்சி பெறும் என்றும் இரண்டாமிடம் சஜித் பிரேமதாசவின் கட்சிக்குக் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தேன் அவை யாவும் உறுதியாகிவிட்டன

245 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 145 இடங்களை அது பெற்றுள்ளது. அதன் தோழமைக் கட்சிகள் 5 இடங்களைப் பெற்றுள்ளன, 

மூன்றாவது முறையாக மொட்டு மலர்கிறது (மொட்டு அந்தக் கட்சியி்ன் தேர்தல் சின்னம்) இது அவர் புதிதாகத் தொடங்கிய கட்சிக்கு மூன்றாண்டுகளில் கிடைத்த மூன்றாவது பெரிய வெற்றியாகும். 2018 பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல், 2019ல் நடந்த ஜனாதிபதித் தேர்தல் இரண்டிலும் பெரும் வெற்றிகளைப் பெற்ற அவரது கட்சி இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இவ்வளவு குறைந்த காலத்தில் இப்படி 'ஹாட் ரிக்' எடுத்த அரசியல் கட்சி நானறிந்தவரையில் வேறொன்றில்லை

இந்தத் தொடர் வெற்றிகளுக்குக் காரணம் இலங்கையில் தேசியம் என்ற உணர்வு மேலோங்கி இருப்பதுவே. பிரிவினையின் அடிப்படையாகக் கொண்ட நீண்ட உள்நாட்டு யுத்தத்தைக் கண்ட ஒரு தேசத்தில் இந்த எழுட்சி கவனிக்கத் தக்கது. ஆனால் 

உலகம் முழுவதும் தேசியம் (Nationalism) என்ற உணர்வு ஒவ்வொரு நாட்டிலும் மேலெழுந்து வரும் காலகட்டத்தில் இது வியப்பளிப்பது அல்ல. ராஜபக்க்ஷேவின் அரசியல் எதிரியாகக் கருதப்பட்ட ரனில் விக்ரமசிங்கேயின் கட்சி நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் 106 இடங்களைக் கொண்டிருந்தது. அது ஒரே ஒரு இடத்தை மட்டுமே இந்தத் தேர்தலில் வென்றிருக்கிறது. 

ஆனால் அதிலிருந்து கிளைத்த, விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பிரமதாசாவின் மகன் சஜித் பிரமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்து பிரதான எதிர்கட்சியாக விளங்கும் 

தமிழர்கள், எப்போதும் போலச் சச்சரவிட்டுப் பிரிந்து நின்றதால் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் பிளவுபட்ட ஆணைகளையே (Fractured Mandate) பெற்றிருக்கிறார்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தொகுதியில் முன்னாள் வடக்கு மாகண முதல்வர் விக்னேஸ்வரனையும், தமிழ் தேசியக் கூட்டணியின் பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் சிங்களவர் கட்சி என அறியப்படும் இலங்கை சுதந்திரக் கட்சி வீழ்த்தியிருப்பது ஒரு சான்று.

கிழக்கிலங்கை மட்டக்கிளப்பில் பிள்ளையன் என்றறியப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் வென்றிருக்கிறார். திருகோண மலையில் உள்ள மூதூரில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவுடன், சஜித் பிரமேதாசாவின் கட்சி வென்றிருக்கிறது

இவை ராஜபக்க்ஷேயின் கட்சி சிறுபான்மையினரின் முழு நம்பிக்கையைப் பெறவில்லை என்பதையும் ஆனால் அவர்கள் தேசிய நீரோட்டத்தை நோக்கி நகர்கிறார்கள் என்பதையும் காட்டுகின்றன. இப்போது சகோதர்கள் இருவரின் கையிலும் இலங்கை இருக்கிறது.,

இனம் அல்ல வளர்ச்சி முக்கியம் எனக் கருதி நாட்டின் பொருளாதாரம் குறித்த சரியான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்களேயானால் இலங்கையை இன்னொரு சிங்கப்பூராக மாற்ற முடியும். இலங்கையும் சிங்கப்பூரைப் போல ஒரு சிறிய தீவு என்பது மட்டுமல்ல, அது சிங்கப்பூரைப் போல பல்லின, பலமொழி, பல மதச் சமூகம் என்று குறிப்பிட்டுள்ளார்.