சொத்துகள் இரண்டு மடங்காகும்! ஆசை காட்டிய ரைஸ் புல்லிங் கேங்! ரூ. ஐந்தரை கோடியை இழந்து மோசம் போன டாக்டர் குடும்பம்!

ஐதராபாத்: ரைஸ் புல்லிங் மோசடியில் ரூ.5.50 கோடி இழந்த, ஆந்திர டாக்டர் குடும்பத்தினருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 இந்த உலகம் நவீனமடைந்து வரும் சூழலில், இன்னமும் உழைப்பை நம்பாமல் பலவித மூட நம்பிக்கைகளை நம்பி பணத்தை ஏமாறுவோர் நிறைய பேர் உள்ளனர். இதற்கு உதாரணமாக, ஆந்திராவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ராமகிருஷ்ணம் ராஜூ. இவர், கடந்த ஆகஸ்ட்30ம் தேதியன்று, தனது மனைவி மற்றும் மகனுடன் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு, கடும் நிதிநெருக்கடியே காரணம் எனக் கூறப்படுகிறது.  

இதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், டாக்டர் ராமகிருஷ்ணம் சமீபத்தில் ரைஸ் புல்லிங் கும்பல் ஒன்றில் சிக்கி ரூ.5.50 கோடி பணத்தை இழந்த விசயம் தெரியவந்தது. பன்மடங்கு பணம், சக்தியை மீட்டு தருவதாகக் கூறி, அவர்கள் இவ்வாறு ஏமாற்றியுள்ளனர்.

இதையடுத்து, ராமகிருஷ்ணம் உறவினர்கள் வலியுறுத்தியதன் பேரில், இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பலில் ஒருவரான வேணுதர் பிரசாத் என்பவரை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். இதுபற்றி அடுத்தக்கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.