டெபாசிட் கூட கிடைக்காத தொகுதியில் சீட்! ஈவிகேஎஸ்க்கு ராகுல் வைத்த ஆப்பு!

டெபாசிட் கூட கிடைக்காத தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சீட் கொடுத்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டார். இதில் யாரும் எதிர்பாராத வகையில் தேனி தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு தொகுதியில் போட்டியிட மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று பெரும் குழப்பத்தில் இருந்தார். அதே சமயம் தேர்தலில் போட்டியிடுவது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.

எனவே கரூர் அல்லது விருதுநகர் தொகுதியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தேனி தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ராகுல் காந்தி சீட் வழங்கியுள்ளார்.

தேனி தொகுதி முழுக்க முழுக்க முக்குலத்தோர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய தொகுதி. எனவே தான் அங்கு அதிமுக சார்பில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அதிமுக சீட் கொடுத்துள்ளது. 

இதேபோல் டிடிவி தினகரன் தனது கட்சி சார்பில் தங்க தமிழ்ச்செல்வனை தேனி தொகுதியில் களம் இறங்கியுள்ளார். தங்க தமிழ்ச்செல்வன் கூட முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான்.

ஆனால் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தேனியில் சீட் கொடுக்கப் பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி காரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம் உள்ளூர் பிரமுகர்களான ரவீந்திரநாத் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் எதிர்கொள்ள முக்குலத்தோர் வாக்குகள் அவசியம்.

ஆனால் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டுக்காரர்.  ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரை தேனி தொகுதி மக்கள் எப்படி தங்கள் எம்பியாக தேர்வு செய்வார்கள் என்று லோக்கல் காங்கிரஸ்காரர்களே புலம்புகின்றனர்.

இது போன்ற காரணங்களால் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்கிற நிலையில் ராகுல் காந்தி அவரது அரசியல் வாழ்விற்கு பெரிய ஆப்பு ஒன்றை வைத்துள்ளதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.