மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம்! சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை உதறிவிட்டு ஒரு கிராமத்தை காப்பாற்ற வந்த ரேகா!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் சாஃப்ட்வேர் பணியை ராஜினாமா செய்துவிட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தாலுகாவுக்குட்பட்டது பாண்டேஸ்வரம் கிராமம். இந்த கிராம ஊராட்சியில் போட்டியிட்ட ரேகா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இதுநாள் வரை சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது கணவரும் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர். அவருக்கு மாத சம்பளம் 1.50 லட்சம் ரூபாய்.

இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வான ரேகாவும் அவரது கணவரும் தங்கள் பணியை ராஜினாமா செய்துவிட்டு இயற்கை விவசாயத்தில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ரேகாவின் மாமனார் குடும்பம் அரசியல் செல்வாக்கு பெற்ற குடும்பம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ரேகா தெரிவித்தபோது, கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். கீரை, நெல் உள்ளிட்டவற்றை விவசாயம் செய்து வருகிறோம்.

ஏரிகளில் மணல் திருட்டு, செங்கல் சூளைகள் ஆகியவற்றால் பாண்டேஸ்வரம் கிராம மக்களின் வாழ்க்கை முறை மாறி வருவதால் விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரம் இருந்தால்தான் எதையும் செய்ய முடியும் கருதி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் ஆனேன். இப்போது அதிகாரம் கிடைத்துள்ளதால் பாண்டேஸ்வரத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் பல மாற்றங்களை கொண்டு வருவேன் என தெரிவித்தார்.