ஐந்து ரூபாய்க்கு தரமான சுவையான உணவு

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 27


பள்ளி மாணவர்கள் வயிற்றுப் பசியுடன் இருக்கக் கூடாது என்று பெருந்தலைவர் காமராஜரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் அவரவர் பாணியில் மதிய உணவுத் திட்டத்தையும் சத்துணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் வயிற்றுப் பசியில் வாடும் ஏழைகளுக்குத் தன்னால் முடிந்த அளவு சிறிய உதவியாவது செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டார் சைதை துரைசாமி. முதியோர்களும் கடும் உழைப்பாளிகளும் உணவுக்குத் திண்டாடுவது அவருக்கு கடும் வேதனை கொடுத்தது.. எனவே ஏழை மக்களுக்கு உதவும் எண்ணத்தில், பரிட்சார்த்த ரீதியாக 2006-ம் ஆண்டு சைதாப்பேட்டை பூக்காரத் தெருவில் மலிவு விலை உணவகம் ஒன்றை, அவரது மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை மூலம் தொடங்கினார்.
ஏழைகள் வாங்கி சாப்பிடும் வகையில் அந்த மலிவு விலை உணவகத்தில் அனைத்து உணவுகளும் 5 ரூபாய்க்குள் இருக்கும்படி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதேநேரம், அங்கு தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரமும், சுவையும் எந்த வகையிலும் குறையக்கூடாது என்பதில் பெரும் கவனம் செலுத்தினார்.
ஆரோக்கியமான உணவு மிகவும் குறைவான விலையில் கொடுக்கப்படும் தகவல் தெரியவந்ததும், சைதையின் மலிவு விலை உணவகத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு கிடைத்தது. சைதாப்பேட்டை மக்கள் மட்டுமின்றி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு உழைப்பாளிகள் மலிவு விலை உணவகத்தின் நிரந்தர வாடிக்கையாளராக மாறினார்கள். சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சைதாப்பேட்டைக்குத் தேடிவந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.
மிகவும் குறைந்த விலையில் உணவு கொடுத்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படவில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு விற்பனை அதிகமாக இருந்தது. கடுமையான நஷ்டம் ஏற்படும் என்று நினைத்த சைதை துரைசாமிக்கு, இந்த மலிவுவிலை உணவகத்தின் வருமானம் ஆச்சர்யமாக இருந்தது.
தனியொரு மனிதனால் இப்படியொரு உணவகம் நடத்த முடியும் என்றால், அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் இதை விட குறைந்த விலைக்கு நஷ்டமின்றி தரமுடியும் என்று நம்பினார். அதனை செயல்படுத்துவதற்கும் காலம் கூடி வந்த்து.
- நாளை பார்க்கலாம்.