திடீரென மக்கள் நலனுக்காக கட்சியை தொடங்குகிறேன் என்று அரசியலில் குதித்து முதல்வர் ஆனவர் அல்ல எம்.ஜி.ஆர். ஆம், அவர் நாடக நடிகராக இருந்த காலத்தில் இருந்தே அரசியல் ஈடுபாட்டுடன் இருந்தார்.
திடீர் முதல்வர் அல்ல புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்! அரசியல் அவர் ரத்தத்தில் கலந்தது!
ஆம், அப்போது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். அண்ணாவின் பேச்சாலும், கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்த புரட்சித்தலைவர்., 1952-ம் ஆண்டு திமுகவில் நுழைந்தார். அப்போதே 25 படங்களில் நடித்து புகழ்பெற்ற கலைஞராக விளங்கினார்.
1956-ம் ஆண்டு வெளியான ‘மதுரை வீரன்’ திரைப்படம் பிரமாண்ட வெற்றிபெற்றதுடன், சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் புரட்சித்தலைவரை கொண்டுபோய் சேர்த்தது. அவர்கள் புரட்சித்தலைவரை தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடினார்கள்.
இந்தப் படத்துக்கு மக்கள் கொடுத்த அமோக ஆதரவையும் அன்பையும் கண்டு நெகிழ்ந்த புரட்சித்தலைவர்., தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு புதிய நெறிகளை வகுத்துக்கொண்டார். நேர்மை, அன்பு, மனிதநேயம், வள்ளல்தன்மை, வீரம் போன்ற தன்னுடைய இயல்பான குண நலன்களை சினிமாவில் புகுத்தி, வெள்ளித் திரைக்கும் நிஜ வாழ்வுக்கும் உண்மையாக வாழத் தொடங்கினார்.
1957-ம் ஆண்டு முதன்முறையாக திமுக தேர்தலில் நின்றது. அப்போது 15 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக வெற்றிவாகை சூடியது. இந்த நேரத்தில் புரட்சித்தலைவருக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருந்தது.
அண்ணாவும் அவரது பகுத்தறிவுத் தம்பிகளும் எழுத்தாலும் பேச்சாலும் படிப்பறிவு பெற்ற மக்களிடம் கட்சியை வளர்த்தார்கள். ஆனால் படிப்பும் வசதிகளும் இல்லாத கிராமப்புற மக்கள்தான் உண்மையான ஓட்டு வங்கி என்பதைப் புரிந்துகொண்டு,
அந்த கடைக்கோடி பாமர மக்களிடம் திமுகவை கொண்டுசென்றது புரட்சித்தலைவர்தான். ஆம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் புரட்சித்தலைவரின் பங்களிப்பை எவரும் மறுக்கவே முடியாது.