20க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய பட்டாசு ஆலை..! அரசு அனுமதிகூட பெறாமல் இயங்கிய கொடூரம்!

பஞ்சாபில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் மற்றும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பஞ்சாபில் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள குர்தாஸ்பூர் பகுதியில் அரசு அங்கீகாரமற்ற முறையில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மருந்து வெடிப்பினால் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் பலர் ஆலையின் அருகே உள்ள இடுக்குகளில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்றுவருகிறது. 

இதுகுறித்து மாநில காவல்துறை ஆய்வாளர் கூறுகையில், சம்பவம் மாலை 4 மணி அளவில் நடைபெற்றிருக்கிறது. இந்த மருந்து வெடிப்பினால் பட்டாசு ஆலை முழுவதும் சேதமடைந்துள்ளது. அருகிலுள்ள கட்டிடங்களும் ஒரு சில பகுதிகள் நாசமாகி இருக்கின்றன. காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் இடுக்குகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முழுமையாக தெரியவில்லை. மீட்புப் பணி முடிந்தவுடன் முழு விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் சம்பவம் குறித்து பேசுகையில், மீட்பு பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் அங்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.