சுஜித் தவறுக்கு தண்டனை ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்களுக்கா? கொடி பிடிக்கும் ஈஸ்வரன்!

சுஜித் மரணத்திற்குப் பிறகு, ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கொங்கு ஈஸ்வரன்.


ஒரு விபத்து நடந்தால் அந்த விபத்தை தடுப்பதற்கான முயற்சிகளில் அரசு இறங்குவது தேவை தான். ஆனால் நடைமுறை சாத்தியமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலில் இருக்கின்ற 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள்.

ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.15,000 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பெரும்பாலும் கொங்கு மண்டலத்தில்தான் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலை நம்பி இருப்பவர்கள் 1000 கணக்கில் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்டங்களிலும் பதிவு செய்ய வேண்டுமென்றால் 5 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வேண்டும்.

இது நடைமுறை சாத்தியமற்றது. ஒரு மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். கட்டணமாக இவ்வளவு அதிகமான தொகையை வசூலிக்க முயற்சிக்க கூடாது. பொருளாதார தேக்க நிலையாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பினாலும் முடங்கிப்போய் இருக்கின்ற ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்களுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவு அமைந்திருக்கிறது.

50,000 குடும்பங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இந்த உத்தரவுகளில் இருக்கின்ற கட்டண வசூலை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.