டெல்லி வன்முறையைக் கண்டித்து 29-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அழைப்பு!

டெல்லியில் மதவாத வன்முறையில் இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வரும் 29ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.


இது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்:” கடந்த சில நாட்களாக புதுதில்லியில் இசுலாமியர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை வெறியாட்டம் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. இந்த வன்முறையில் ஒரு காவலர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் கண்டெடுக்கப்படாத சடலங்கள் உள்ளன என்றும் தெரியவருகிறது. இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் உள்துறை அமைச்சர் அமித்சா அவர்களும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

காவல்துறையினரின் பாதுகாப்போடு மதவெறி கும்பல்கள் வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆட்சியாளர்களின் துணையின்றி அதிகாரிகள் இவ்வாறு ஒரு சார்பாக செயல்பட இயலாது. டெல்லி காவல்துறை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் காவல்துறை இயங்கி வருகிறது.

ஆனால், புதுதில்லியில் மட்டும் இந்திய தலைநகர் என்பதால் காவல்துறையை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால், மைய அரசின் விருப்பப்படியே தில்லி காவல்துறை செயல்படும் நிலை உள்ளது. எனவே, தில்லியில் காவல்துறையை உள்துறை அமைச்சகத்தின் பிடியிலிருந்து விடுவித்து யூனியன் பிரதேச அரசிடம் ஒப்படைக்கவேண்டும்.

தில்லியில் நடந்த இந்த வன்முறை வெறியாட்டம் குறித்து வழக்கு பதிவு செய்யாததை வெளிப்படையாக கண்டித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இரவோடு இரவாக தில்லியிலிருந்து பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதித்துறையில் எந்த அளவுக்கு தலையீடு உள்ளது என்பதற்கு இந்நிகழ்வே ஒரு சான்றாக உள்ளது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் எவ்வாறு ஒரு திட்டமிட்ட மதவெறியாட்டம் இசுலாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டதோ அதே போன்ற ஒரு அணுகுமுறையே தில்லி வன்முறையிலும் தென்படுகிறது. மேலும், மதவெறி கும்பல்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களோடு வன்முறையில் ஈடுபட்டிருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது.

இத்தகைய போக்குகள் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்கிற கவலையை அதிகரிக்கச் செய்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்கள், குறிப்பாக மைய அமைச்சர்கள் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறையை வெளிப்படையாகத் தூண்டி விடுகின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவோரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள் என்று அனுராக் தாகூர் என்கிற இந்திய அமைச்சர் அண்மையில் வெளிப்படையாக பேசினார்.

கபில் மிஸ்ரா போன்ற பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் மதவெறியாட்டத்தைத் தூண்டி விடும் வகையில் பேசியது அனைவரும் அறிந்ததேயாகும். ஆனால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் வெளிப்படையாக கண்டித்த பின்னரே கண்துடைப்புக்காக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இந்த வன்முறை வெறியாட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

அதற்கு ஏதுவாக இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்திட நீதி விசாரணை ஆணையம் ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டுமென மைய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது அல்லது டெல்லி யூனியன் பிரதேச அரசு இதுகுறித்து நீதி விசாரணை நடத்துவதற்கு ஆணையிட வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து வரும் 29.2.2020 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். பிற ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம். மார்ச் 1 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இப்போராட்டம் ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.