சாத்தான்குளம் காவல் துறையினரின் இரட்டைக் கொலை! நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்!

சாத்தான்குளம் காவல் துறையினரின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கேட்டு ஜூன் 26ம் தேதியன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.


தமிழகத்தை உலுக்கியுள்ள இச்சம்பவத்தில் இரண்டு துணை உதவி ஆய்வாளர்கள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. நடந்த சம்பவம் இரண்டு மனித உயிர்களை பலி வாங்கி இருக்கிறது. இது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம் என்றே கூற வேண்டும்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காவல்துறையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டின் மீது தமிழக அரசு குறைந்தபட்ச நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதே சாத்தான்குளம் சம்பவத்திற்கு பின்புலமாக உள்ளது. குற்றம் செய்த காவலர்களை பாதுகாக்கக்கூடிய முயற்சியிலேயே அரசும் நிர்வாகமும் ஈடுபடுகின்றன.

இதுதான் அதிகாரத்தில் இருப்பவர்களை குற்றம் செய்ய ஊக்குவிக்கிறது. இச்சூழலில் மக்களின் கொந்தளிப்பை தற்காலிகமாக குறைக்கும் நோக்கில் மேலோட்டமான சில நடவடிக்கைகள் எடுப்பது மட்டும் போதாது. சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஏகோபித்த முழக்கமாக மாறியிருக்கிறது.

எனவே, இக்கொடுமையைக் கண்டித்தும், கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர்/ கோட்ட மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள மாவட்டங்கள் தவிர இதர மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.