ஊசியால் குத்துவது போல் வலிக்கும்..! உடல் முழுவதும் எரியும்..! மருத்துவ கல்லூரி மாணவிக்கு பேராசிரியரால் நேர்ந்த விபரீதம்!

பெங்களூரு: பேராசிரியர்கள் கேலி செய்ததால் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தியதாக, மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.


 பெங்களூருவைச் சேர்ந்தவர் அனுபா மகாஜன். இவர், 2016ம் ஆண்டு பொம்மனஹள்ளி பகுதியில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு டென்டல் காலேஜில் பல் மருத்துவ பிரிவில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்திருக்கிறார். ஆனால், அங்கேதான் அவருக்கு ஒரு பிரச்சனை வந்து சேர்ந்தது. ஆம், முதுகலை படிப்பில் சேர்வதற்கு 2 ஆண்டுகள் முன்பாக, அனுபா மகாஜன், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அதன்காரணமாக, அவருக்கு காம்ப்ளக்ஸ் ரீஜினல் பெயின் சிண்ட்ரோம் எனும் விநோத பாதிப்பு உடலில் ஏற்பட்டு, நாள்பட்ட தீராத வலியை கொடுத்துள்ளது. இந்நிலையில், முதுகலை மருத்துவ படிப்பில் சேர்ந்து 2 மாதங்கள் சென்ற பின், அடிக்கடி அவருக்கு, இந்த சிண்ட்ரோம் காரணமாக, உடல் வலி ஏற்பட தொடங்கியுள்ளது.  

குறிப்பாக, கை, கால்கள் கடுமையான வலியை சந்தித்து, சோர்வடையும் என்பதால், அடிக்கடி விடுமுறை கேட்டு விண்ணப்பம் செய்து வந்திருக்கிறார் அனுபா மகாஜன். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை தலைவர் டாக்டர் பிரியா சுப்ரமணியம் ஒப்புதல் அளித்திருக்கிறார். இப்படி அடிக்கடி விடுமுறை எடுத்ததால், 2018ம் ஆண்டில் முடிக்க வேண்டிய முதுகலை மருத்துவ படிப்பு, தள்ளிப் போய்விட்டது.  

இதற்கிடையே மற்ற பேராசிரியர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, அனுபாவை கேலி, கிண்டல் செய்ததோடு, உதாசீனப்படுத்தவும் செய்துள்ளனர். சரியான அனுசரனை, உரிய வழிகாட்டி இல்லாதது போன்ற காரணங்களால் பொறுத்துப் பொறுத்து பார்த்த அனுபா ஒருகட்டத்தில் தனது படிப்பை பாதியிலேயே கைவிட முடிவு செய்துவிட்டார்.

இதன்படி, இவ்வாண்டு தொடக்கத்தில் தனது படிப்பை கைவிடுவதாக, அனுபா, சம்பந்தப்பட்ட காலேஜ் நிர்வாகத்திடம் கூறியுள்ளார். ஆனால், அதனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டாலும் அனுபாவின் சான்றிதழ்களை திருப்பி தராமல் இழுத்தடித்து வருகிறது.  

இதுதொடர்பாக, அனுபா, டென்டல் கவுன்சில் ஆஃப் இந்தியா (டிசிஐ), ராஜிவ் காந்தி யுனிவர்சிடி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் உள்ளிட்டவற்றில் புகார் செய்துள்ளார். இதன்பேரில், ஆக்ஸ்ஃபோர்டு டென்டல் காலேஜ் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், அவர்கள் இழுத்தடிப்பு செய்துவருவதாக, அனுபா குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் உயர் படிப்பு படிக்கும் பெண்களை இழிவுபடுத்துவது போல உள்ளதாகவும் அவர் வேதனையுடன் கூறுகிறார்...