பேராசிரியர்களை தேர்வு செய்வதில் சிக்கல்! விஸ்காம் படிப்புதான் காரணமா?

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2340 உதவி பேராசிரியர் இடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானதும், ஏகப்பட்ட பேர் ஆனந்தப்பட்டனர்.


நீண்ட நாட்கள் கழித்து பெரிய அளவில் ஆட்கள் எடுக்கப்படுவதால், கலந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர். ஆனால், இந்தத் தேர்வில் ஏதோ சிக்கல் இருப்பது தெரியவந்துள்ளது.

ஏனென்றால், உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டி.ஆர்.பி. எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் பதிவு செப்டம்பர் 4ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் பதிவு தேதி தொழில்நுட்ப காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் டி.ஆர்.பி. கூறுகிறது. அது என்ன டெக்னிக்கல் காரணம் என்ன என்பதை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

ஆனால், இதழியல், காட்சி தொடர்பியல் துறையில் ஒரு பிரிவினருக்கு சாதகமாக டி.ஆர்.பி. செயல்படுவதை தடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டதுதான் தள்ளிவைப்புக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. மொத்தம் 73 பாடப்பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடத்துக்கும் அதன் 

வெவ்வேறு பிரிவுகளில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று டி.ஆர்.பி பட்டியல் வெளியிட்டுள்ளது. உதாரணமாக, காமர்ஸ் துறையில் ஆசிரியராக சேர கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ஃபைனான்ஸ் & காஸ்ட் அக்கவுன்டிங், ஃபைனான்ஸ் & கன்ட்ரோல் உட்பட 34 வெவ்வேறு பிரிவுகளில் எம்.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்படியாக 73 துறைகளுக்கும் 136 பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் சேர முடியும். ஆனால், விஷுவல் கம்யூனிகேஷன் என்கிற காட்சி தொடர்பியல் துறைக்கு மட்டும் சமமான படிப்பு எவை என்கிற பட்டியலை டி.ஆர்.பி வெளியிடவில்லை.

விஸ்காம் என சுருக்கமாக சொல்லப்படும் இந்த படிப்புக்கு முன்னோடியானது ஜேர்னலிசம் & மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு. இப்போது விஸ்காம் துறையில் பேராசிரியர்களாக பணிபுரியும் சீனியர்கள் பலரும் மாஸ்காம் முடித்து வந்தவர்கள்தான். ஆனால், மாஸ்காம் அல்லது ஜேனலிசம் போன்ற படிப்புகளை விஸ்காமுக்கு சமமான படிப்புகளாக டி.ஆர்.பி அங்கீகரிக்கக்கூடாது என விஸ்காம் லாபி கொடுத்த அழுத்தத்துக்கு டி.ஆர்.பி பணிந்து விட்டதாக தெரிகிறது.

இதற்கு சட்ட ரீதியாக எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக ஆன்லைன் பதிவு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏதாவது லொள்ளு பண்ணி வேலை தேடுபவர்கள் வயிற்றில் அடிக்காமல் இருந்தால் சரிதான்.