பிரேமலதாவுக்கு ஒரு சந்தோஷம்... ஒரு வருத்தம்..! என்னன்னு தெரியுமா?

ஏற்கனவே தே.மு.தி.க. கட்சிக்கு எந்தப் பக்கம் செல்வாக்கு இருக்கிறது என்று தெரியாமல் அந்தக் கட்சி தவித்துவருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டால், தங்கள் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சத்தில் இருந்தார் பிரேமலதா.


நேற்றைய ரஜினியின் பேட்டி பிரேமலதாவுக்கு செம சந்தோஷத்தைக் கொடுத்துவிட்டதாம். அதைத்தான் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். தே.மு.தி.க. நிர்வாகியின் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட பிறகு பேசினார்.

‘‘ரஜினிகாந்த் மிகவும் நல்ல மனிதர். எங்கள் குடும்பத்திற்கும் கட்சிக்கும் அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. தற்போது அவர் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்லியுள்ளார். தமிழகத்தில் கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் இல்லாததால் ஒரு வெற்றிடம் உள்ளது. இதுதான் சரியான நேரம் என்று ரஜினிகாந்த் சொல்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அனைத்திற்கும் நல்ல முடிவு வரும். தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம் நிகழப்போவது நிச்சயம் உறுதி’’ என்று விஜய்காந்தை மனதில் வைத்து சந்தோஷமாகப் பேசினார்.

அதே நேரம் வாசனுக்கு எம்.பி. சீட் கொடுத்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் இடத்தைக் காலி செய்துவிட்டார். தொடர்ந்து எடப்பாடியிடம் பேசிவந்த பிரேமலதாவிடம், ஒரு வார்த்தைகூட பேசாமல் வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டுவிட்டது. இதுதான் பிரேமலதாவுக்குத் தாங்கவே முடியவில்லை. இந்த வருத்தத்தை தாங்க முடியாமல் கொதிக்கிறார்.

இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடுத்த வாரம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் பிரேமலதா. வழக்கம்போல் கூப்பிட்டு வைத்து கும்மியடிப்பார் என்பதால் நிர்வாகிகள் மிரண்டுபோயிருக்கிறார்கள்.